மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் : இது 6-வது முறை..!
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார். மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 6-வது நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
ஏற்கனவே ஐந்து நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்திருக்கும் இவர் ஆறாவது முறையாக இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார்.
இதற்கு முன்பு, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மட்டுமே மத்திய நிதிநிலை அறிக்கையை ஆறு முறை தாக்கல் செய்திருக்கிறார். பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் மூலம், நிர்மலா சீதாராமன் தனது முன்னோடிகளான மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, பா சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா போன்றவர்கள் இதுவரை ஐந்து முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து படைத்த சாதனைகளை முறியடிப்பார் என்று கூறப்படுகிறது.
மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக இருந்த போது, 1959 – 1964ஆம் ஆண்டு வரை ஐந்து நிதிநிலை அறிக்கைகளையும் ஒரு இடைக்கால நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் இந்த நிதிநிலை அறிக்கையில் பெரிதாக எந்த அறிவிப்புகளும் இடம்பெற்றிருக்காது என்று ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
அதாவது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024, பிப்.1-ல் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பும் இருக்காது. மே மாதத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், தேர்தல் நடைபெறவிருப்பதால் 2024, பிப்.1 நிதிநிலை அறிக்கை (வோட் ஆன் அக்கவுண்ட்) புதிய வரிவிதிப்பின்றி அறிவிக்கப்படும். அதில் அடுத்த ஆட்சி அமையவிருக்கும்வரை அரசு எதிர்கொள்ளவிருக்கும் செலவினங்கள் மட்டுமே பட்டியலிடப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாட்டின் நிதியமைச்சர் பிப்ரவரி 1-ம் தேதி பாராளுமன்றத்தில் சமர்பிப்பதும் விவாதங்கள் மற்றும் அவையின் ஏற்புக்குப் பிறகு ஏப்.1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதும் வழக்கம்.