12 ஆண்டுகளாக அடிக்க ஆள் இல்ல.. டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா.. பேஸ்பாலுக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்கள்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்ததோடு, டெஸ்ட் தொடரையும் வென்று சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தை இந்திய அணியின் ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் கூட்டணி தொடங்கியது. 192 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி நிர்ணயித்த நிலையில், 3வது நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் 4வது நாளின் தொடக்கத்திலேயே ஆண்டர்சன் பவுலிங்கில் சிக்சர் அடித்து ரோகித் சர்மா அதிரடியாக தொடங்கினார்.
இந்திய அணியின் இரு வீரர்களும் விரைவாக ரன்களை சேர்க்க, வெற்றியும் அருகில் வந்து கொண்டே இருந்தது. முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், ஜோ ரூட் பவுலிங்கில் ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் ரோகித் சர்மா அரைசதம் விளாசி நம்பிக்கை அளித்தார். ஆனால் அவரும் டாம் ஹார்ட்லி வீசிய பந்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த ரஜத் பட்டிதர் 0, ரவீந்திர ஜடேஜா 4 மற்றும் சர்பராஸ் கான் டக் அவுட் என்று அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 36 ரன்களுக்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 72 ரன்களும், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகளும் தேவையாக இருந்தது. இதனால் ராஞ்சி மைதானமே பரபரப்பாக காணப்பட்டது.
பின்னர் 2வது இன்னிங்ஸ் ஸ்பெஷலிஸ்ட்டான சுப்மன் கில் – துருவ் ஜுரெல் கூட்டணி இணைந்து நிதானமாக பதற்றமின்றி ரன்களை சேர்த்தது. 30 ஓவர்களுக்கும் மேலாக பவுண்டரியே அடிக்கப்படாமல் இருக்க, இங்கிலாந்து பவுலர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். இதனை 31வது ஓவரிலேயே பவுண்டரி அடித்து துருவ் ஜுரெல் முடிவுக் கொண்டு வந்தார். ஒருபக்கம் பென் ஸ்டோக்ஸ் பவுண்டரி அடிக்க விடக் கூடாது என்று ஃபீல்டிங்கை மாற்றினார்.
ஆனால் துருவ் ஜுரெல் மற்றும் சுப்மன் கில் இருவரும் எளிதாக ஓடி ஓடி ரன்களை சேர்க்க தொடங்கினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 160 ரன்களை கடந்தது. தொடர்ந்து நிதானமாக ஆடிய நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு கிட்டத்தட்ட உறுதியானது. இந்திய அணியின் ரன்கள் தேவை 20 ரன்களாக குறைந்த போது, அடுத்தடுத்து 2 சிக்சரை விளாசி சுப்மன் கில் அரைசதம் கடந்தார். பின்னர் துருவ் ஜுரெல் கடைசி 6 ரன்களை விளாசி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.
இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 52 ரன்களும், துருவ் ஜுரெல் 39 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தனர். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 3-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் ஒரு முறை டெஸ்ட் தொடரை இழக்காத அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது.