விஜய்க்கும் எனக்கும் போட்டியில்லை… காக்கா – கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்..!
நடிகர் விஜய்க்கும், தனக்கும் போட்டி என ரசிகர்கள் பேசுவது மிகவும் கவலை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறிஉள்ளார். லால் சலாம் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தில் இருந்து துரத்தும் காக்கா-கழுகு சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம், வரும் 9-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. நடிகர் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அடுத்த சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது. நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக தனது படங்களில் அரசியல் வசனம் வைத்ததாகக் கூறினார். மதுரையைச் சேர்ந்த விஜயராஜ், விஜயகாந்தாக மாறுவதற்கு உறுதுணையாக இருந்தவரே நடிகர் ரஜினிதான் என்று தம்பி ராமையா கூறினார்.
விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா, தனது தந்தை ரஜினிகாந்தை சங்கி என்று பலரும் பேசுவதாக கூறினார். உண்மையில், ரஜினி சங்கி இல்லை என்று கூறிய ஐஸ்வர்யா, அவர் ஒரு சிறந்த மனித நேயவாதி என்றும், அவர் சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக நடித்திருக்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.
ஐஸ்வர்யாவின் பேச்சைக்கேட்டு கண்கலங்கிய ரஜினி, இறுதியாக நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் போது, தான் சொன்ன காக்கா – கழுகு கதையை, விஜய்யை தாக்கிப் பேசியதாக பலர் நினைத்துக் கொண்டுள்ளதாகவும், அது தம்மை வேதனையடைய செய்தது என்றும் கவலை தெரிவித்தார்.
எப்போதுமே தான் விஜய்யின் நலம் விரும்பி என்று கூறிய ரஜினி, விஜய்யை போட்டியாக கருதினால் தனக்கு மரியாதை தராது என்றும், அதேபோன்று, விஜய் தம்மை போட்டியாக நினைத்தால் அவருக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும் என்றும் குறிப்பிட்டார்.
விஜய் அரசியலுக்கு வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதை குறிப்பிட்ட ரஜினி, அதற்காக அவருக்கு வாழ்த்துகளும் தெரிவித்தார். விஜய் மற்றும் தன்னுடைய ரசிகர்கள் காக்கா – கழுகு கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஜினி கேட்டுக் கொண்டுள்ளதால், ரஜினியின் பேச்சால் உருவான சர்ச்சைக்கு அவரே முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டதாகவே கூறப்படுகிறது.