உள்ளூர் டாடா கார்கள் இல்ல… கொரியன் ஹூண்டாய் கார்களுக்கு இந்தியர்கள் முக்கியத்துவம்!! ஜனவரி சேல்ஸ் ரிப்போர்ட்
இந்தியா, உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. வழக்கம்போல், கடந்த 2024 ஜனவரி மாதத்திலும் லட்சக்கணக்கிலான கார்கள் நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனையாகி உள்ளன. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனம் எது? வழக்கத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் கார்கள் விற்பனை எவ்வாறு இருந்தது? என்பது போன்றதான கேள்விகளுக்கு பதில்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் பல்வேறு கார் நிறுவனங்கள் தங்களது கார்களை விற்பனை செய்கின்றன. இதில் பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடிய வகையில் குறைந்த விலையில், பட்ஜெட் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் என்று பார்த்தால், 14 கார் நிறுவனங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் டாப்-10 நிறுவனங்களை பற்றி மட்டும்தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.
14 நிறுவனங்களில் இருந்து மொத்தம் 3,93,471 கார்கள் கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டின் இதே ஜனவரி மாதத்தில் வெறும் 3,45,805 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் கடந்த மாதத்தில் சுமார் 47,666 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 13.78%. வழக்கம்போல், கடந்த ஜனவரி மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக மாருதி சுஸுகி முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 66,802 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2023 ஜனவரி மாதத்தில் 1 லட்சத்து 47,348 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, மாருதி சுஸுகி கார்கள் விற்பனை ஆனது கடந்த மாதத்தில் 13.20% அதிகரித்துள்ளது. இதுவாவது பரவாயில்லை, 2023 டிசம்பர் மாதத்தில் வெறும் 1 லட்சத்து 4,778 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.
ஹூண்டாய் இந்த வரிசையில் 2வது இடத்தை தனதாக்கி உள்ளது. கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் ஹூண்டாயை முந்திக் கொண்டு டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை பிடித்திருந்தது. ஆனால், கடந்த மாத கார்கள் விற்பனையில் ஹூண்டாய் மீண்டும் தனது பழைய இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை 57,115 ஆகும்.
ஆனால், 2023 ஜனவரியில் 50,106 ஹூண்டாய் கார்களும், டிசம்பரில் வெறும் 42,750 ஹூண்டாய் கார்களும் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த எழுச்சியால் மீண்டும் 3வது இடத்திற்கு சரிந்துள்ள டாடா மோட்டார்ஸ் கடந்த ஜனவரி மாதத்தில் 53,635 கார்களை விற்பனை செய்துள்ளது. 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு சரிந்தாலும், வழக்கத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் டாடா கார்களின் விற்பனை சில ஆயிரங்கள் அதிகரித்துள்ளது.
4வது இடத்தில் உள்ள மஹிந்திராவின் விற்பனை எண்ணிக்கையும் 40 ஆயிரத்தை கடந்து 43,068 ஆக கடந்த மாதத்தில் பதிவாகி உள்ளது. 2023 ஜனவரியில் இதனை காட்டிலும் சுமார் 10 ஆயிரம் மஹிந்திரா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 5வது மற்றும் 6வது இடங்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விற்பனை எண்ணிக்கைகளுடன் கியா மற்றும் டொயோட்டா உள்ளன.
இதில், கியா கடந்த மாதத்தில் 23,769 கார்களையும், டொயோட்டா 23,197 கார்களையும் விற்பனை செய்துள்ளன. இதில், தென்கொரிய கார் பிராண்டான கியாவின் விற்பனை 2023 ஜனவரியை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. இந்த வரிசையில், 7வது இடத்தில் ஹோண்டா 8,681 கார்களின் விற்பனை உடன் உள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 3 இடங்களில் ரெனால்ட் (3,826), எம்ஜி மோட்டார் (3,825) மற்றும் ஃபோக்ஸ்வேகன் (3,267) உள்ளன.