இனி காக்காவும் வேண்டாம்.. கழுகும் வேண்டாம்.. ரஜினி பேச்சுக்கு ரசிகர்களின் ரியாக்ஷன்!
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இத்திரைப்படம் பிப்ரவரி 9ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், காக்கா, கழுகு பற்றி பேசுவதை இப்போதே விட்டு விடுங்கள். இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத்தோற்றத்தில் நடித்த லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில், சில பிரச்சனை காரணமாக படம் எதிர்பார்த்த படி வெளியாகவில்லை. இப்படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், என்னோட நண்பர் இசைஞானி இளையராஜாவின் மகள் பவாதாரிணி அகால மரணமடைந்திருக்காங்க. என்னோட ஆழ்ந்த இரங்கல்கள். அதன் பிறகு கேப்டன் விஜயகாந்த். கலைஞர், ஜெயலலிதா இருக்கும்போதே எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் இருவருக்கும் இரங்கல் தெரிவித்துவிட்டு பேசத் தொடங்கினார்.
கதை பிடித்துவிட்டது: சிவப்புக்கு நிறத்திற்கு நிறைய அடையாளங்கள் இருக்கு. அதை கம்யூனிஸ்ட் பயன்படுத்துவாங்க. வன்முறைக்கும் பயன்படுத்துவாங்க, புரட்சிக்கும் பயன்படுத்துவாங்க. ஐஸ்வர்யா புரட்சிக்காக தேர்ந்தெடுத்துருக்காங்க. இந்தக் கதைக்கு தேசிய விருது கிடைக்கும்னு என் மகள் சொன்னாங்க. கதை கேட்டதும் எனக்கு பிடித்துவிட்டதால், அந்த கதாபாத்திரத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்றேன்.
விஜய்க்கு கொடுத்த அட்வைஸ்: இதைத்தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த். நான் சொன்ன காக்கா கழுகு கதையை பலர் விஜய்யை தாக்கி பேசியதாக நினைத்துக் கொண்டார்கள். அது என்னை ரொம்பவே வேதனையடைய செய்தது. நான் எப்போதுமே அவரின் நலம் விரும்பிதான். விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் ஷுட் முடிஞ்சதும் சந்திரசேகர் விஜயை அறிமுகப்படுத்தினார். என் பையன். நடிப்புல ரொம்ப ஆர்வம் இருக்கான். நீங்க சொல்லுங்க, படிச்சுட்டு வந்து ஆக்ட் பண்லாம்ன்னு என்றார். அப்ப விஜய்யிடம் நல்லா படிப்பா. அதுக்கப்புறம் நடிகர் ஆகலாம்னு என்றேன்.
எனக்கு நான் தான் போட்டி: அதுக்கப்பறம் விஜய் நடிகர் ஆகி, படிப்படியாக அவருடைய டிசிப்ளின், திறமை, உழைப்பால இப்ப உயர்வான இடத்துல இருக்கார். அடுத்து அரசியல், சமூகசேவைனு போக இருக்கார். இதுல வந்துட்டு எனக்கும் விஜய்க்கும் போட்டினு சொல்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. என் படத்திற்கு நான் தான் போட்டி. விஜய் படத்திற்கு அவர் தான் போட்டி. எனவே காக்க கழுகை வைத்து பேசுவதை இன்றே விட்டுவிடுங்கள் என்றார்.
காக்காவும் வேண்டாம் கழுகும் வேண்டாம்: இணையத்தில் இவரின் பேச்சு வைரலாகி வரும் நிலையில், ரஜினி விஜயை பற்றி நன்றாகத்தான் பேசி இருக்கிறார். இதற்கு பிறகும் விஜய் ரசிகர்கள் காக்கா கழுகுனு பேசிக்கிட்டு இருந்தால், அவங்க ஐந்து அறிவு படைத்த மிருகம் என்றுதான் சொல்ல வேண்டும். இனிமே காக்காவும் வேண்டாம், கழுகும் வேண்டாம் எல்லாத்தும், இந்த இசைவெளியீட்டு விழாவில் தலைவர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.