இனி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் ‘FASTag’ செல்லாது!
‘FASTag’ சேவை வழங்கும் வங்கிகளின் பட்டியலில் இருந்து பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை நீக்கியதால் அதன் மூலம் வாங்கப்பட்ட ‘FASTag’ செல்லாது எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 2 கோடி பேர் வேறு வங்கிகளில் இருந்து புதிய ஸ்டிக்கர்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக, KYC பிரச்சனை காரணமாக, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் மீது சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கித் தடை விதித்திருந்தது. இதற்கு பிப்ரவரி 29- ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், வரும் மார்ச் 15- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மார்ச் 15- ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் கணக்கில் மேற்கொள்ளப்படும் டெபாசிட் பரிவர்த்தனைகள் மற்றும் ‘FASTag’ போன்ற எந்தவொரு சேவையும் செல்லுபடியாகாது என ரிசர்வ் வங்கிக் கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, மார்ச் 15- ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களின் கணக்குகளை வேறு வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.