சார்ஜ் போடவே தேவையில்ல! இந்த ரோட்ல இவி கார் போனா தானா சார்ஜ் ஏறும் எப்படி தெரியுமா?
எலெக்ட்ரிக் காரை சாலையில் ஓட்டினால் காரின் பேட்டரியின் சார்ஜ் அளவு குறைந்து கொண்டே இருக்கும் என்பது நமக்கு எல்லாம் தெரிந்த விஷயம் தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாலையில் எலெக்ட்ரிக் வாகனத்தை ஓட்டும் போது சார்ஜ் குறைவதற்கு பதிலாக சார்ஜ் ஏறும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மையிலேயே அப்படியான ஒரு சாலை பயன்பாட்டில் உள்ளது. இதுகுறித்த விபரம் விபரங்களை காணலாம் வாருங்கள்.
அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் டெட்ராய்ட் என்ற நகரம் உள்ளது இந்த நகரத்தில் உள்ள கிராக்டவுன் என்ற பகுதியில் 14 வது சாலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சென்றால் எவ்வளவு தூரம் சார்ஜ் இறங்குகிறதோ அவ்வளவு தூரம் சார்ஜ் ஏறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சாலையை ஒரு வயர்லெஸ் சார்ஜராக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டது.
இந்த சாலையில் வாகனம் பயணிக்க வாகனத்தில் உள்ள பேட்டரியிலிருந்து சார்ஜ் குறைந்து கொண்டிருக்கும். அதே நேரம் வாகனம் சார்ஜில் போடப்பட்டிருந்தால் எப்படி சார்ஜ் ஏறுமோ அதேபோல இந்த சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வாகனத்திற்கு சார்ஜ் ஏறும் தொழில்நுட்பமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
இந்த சாலை பார்ப்பதற்கு சாதாரண ஒரு சாலையாக தான் தோன்றும். ஆனால் இது ஒரு வயர்லெஸ் சார்ஜர் சாலையாக செயல்படும். டெட்ராய்ட் நகரில் 14வது சாலையில் சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு இந்த வயர்லெஸ் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக பயணிக்கும் அனைத்து வாகனங்களும் இந்த வயர்லெஸ் சார்ஜரை கடந்து தான் பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இந்த வயர்லெஸ் சார்ஜர் சாலையை உருவாக்குவதற்காக சாலையின் கீழே எலெக்ட்ரோ மேக்னடிக் காயில்களை பொருத்தியுள்ளனர். இந்த காயல்கள் நகரில் உள்ள மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காயில் வழியாக மின்சாரம் பாயும் போது எலெக்ட்ரோ மேக்னடிக் காயில்கள் எலெக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்டுகளை சாலைக்கு மேலே உருவாக்குகிறது. இதனால் அந்த வழியாக வாகனம் பயணிக்கும் போது எலெக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்டுகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை பேட்டரியில் சேமித்து வைக்கிறது.
இந்த தொழில்நுட்பத்திற்கு இன்ஆக்டிவ் சார்ஜிங் என பெயர் வைத்துள்ளார்கள். நாம் செல்போன்களில் எப்படி வயர்லெஸ் முறையில் சார்ஜ் ஏற்றுகிறோமோ அதே தொழில்நுட்பம் தான் இது. செல்போன் சிறியதாக இருப்பதால் அதற்குரிய வயர்லெஸ் சார்ஜரும் மிகச் சிறியதாக இருக்கும். ஆனால் கார் பெரியதாக இருப்பதால் அதற்கான வயர்லெஸ் சார்ஜர் ஒரு சாலையாக கட்டமைப்பு திட்டமிட்டுள்ளனர்.
இப்படியான சாலைகளை ஆங்காங்கே அமைப்பதன் மூலம் சாலையில் செல்லும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்து தானே சார்ஜ் ஏற்றுக் கொள்ளும் வகையில் உருவாகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும் என்ற சூழ்நிலை இருக்கும் போது இப்படியான சாலைகள் கட்டமைக்கப்பட்டால் நீண்ட தூரம் எலெக்ட்ரிக் வாகனங்களால் பயணிக்க முடியும்.
தற்போது இந்தியா போன்ற நாடுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள ரேஞ்ச்,ஆங்காங்கே உள்ள சார்ஜிங் வசதிகள் எல்லாம் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதன் காரணமாக பலர் எலெக்ட்ரிக் வாகனங்களில் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் பெட்ரோல்,டீசல் இன்ஜின் வாகனங்களை வாங்கி வரும் நிலையில் இந்த சாலைகள் அந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அமெரிக்காவில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சாலை வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் உலகம் முழுவதும் விரிவடைய அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள ரேஞ்ச் பிரச்சனைக்கு இது மிகப்பெரிய தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்ல இந்த சாலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாகனம் பயணிப்பதால் இடையூறு இல்லாமல் வாகனங்கள் நீண்ட தூரம் பயணிக்கவும் வசதியாக இருக்கும்.