யார் செத்தாலும் வரமாட்டார்.. போண்டா மணிக்கு அஞ்சலி செலுத்த வடிவேலு வராதது ஏன்? காமெடி நடிகர் பதில்!
தமிழ் சினிமா நகைச்சுவை துணை நடிகர்களில் ஒருவரான போண்டா மணி நேற்று நள்ளிரவு காலமானார். போண்டா மணி ஈழத்தை பூர்விகமாகக் கொண்டவர். இவரது இயற்பெயர் கேத்தீஸ்வரன். இவருடன் பிறந்த 16 பேரில் 8 பேர் இலங்கை இனக்கலவரத்தில் இறந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு வந்தார் கேதீஸ்வரன். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
1991 ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் போண்டா மணி. 1994 ஆம் ஆண்டில் வெளியான தென்றல் வரும் தெரு படம் தான் போண்டா மணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றார். விவேக், வடிவேலு ஆகியோரின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி ஒரு படத்தின் காட்சிக்காக, சாக்கடையில் விழுந்தபோது, கழிவுநீரை பருகும் நிலை ஏற்பட்டது. இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவரது சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பலரது உதவியால் மீண்டு வந்தார்.
இந்நிலையில், மீண்டும் உடல் நலம் குன்றி நேற்று இரவு 11 மணி அளவில் தனது வீட்டில் மயங்கி விழுந்தார் போண்டா மணி. அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நகைச்சுவை நடிகர் போண்டா மணி மரணம் கேள்விப்பட்ட திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
நள்ளிரவில் திடீரென நடுங்கிய நடிகர் போண்டாமணி.. இரவு நடந்தது என்ன.. கண்ணீருடன் விவரித்த மகன்
அந்தவகையில், நகைச்சுவை நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் உள்ளிட்ட பலர், போண்டா மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சாரப்பாம்பு சுப்புராஜ், “போண்டா மணி எல்லோருக்கும் நல்லது செய்வார். நேற்று கூட காலையில் போண்டா மணியிடம் போனில் பேசினேன். என் பேச்சை கேட்பார். நான் நிறைய திட்டி இருக்கிறேன். பிறகு நானே போய் பேசினேன்.
போண்டா மணி குடும்பத்திற்கு வசதி இல்லை. திரையுலகினர் அனைவரும் சேர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ஏதாவது செய்ய வேண்டும். இலங்கைக்கு போக வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. தனது பிள்ளைகளை ஈழத்திற்கு கூட்டிச் சென்று காட்ட வேண்டும் என விரும்பினார். பாஸ்போர்ட் வரும்போது அவர் இல்லாமல் போனது வருத்தமாக இருக்கிறது.” என்றார்.
போண்டா மணி மறைவையடுத்து அஞலி செலுத்த நடிகர் வடிவேலு வராதது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சாரப்பாம்பு சுப்புராஜ், “வடிவேலு, யார் செத்தாலும் போக மாட்டார். விவேக் இறந்தபோதும், மனோபாலா, மயில்சாமி, அல்வா வாசு, நெல்லை சிவா, கிருஷ்ணமூர்த்தி என அவருடன் நடித்த பலர் இறந்தபோதும் அவர் நேரில் செல்லவில்லை. கல்யாணத்திற்கு கூட யார் வீட்டிற்கும் போகமாட்டார்” எனத் தெரிவித்தார்.
மருதமலை உள்ளிட்ட பல படங்களில் வடிவேலுவுடன் போண்டா மணி, சாரப்பாம்பு சுப்புராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் காம்பினேஷனில் பல படங்களின் நகைச்சுவை காட்சிகள் பிரபலமானவை. இந்நிலையில், போண்டா மணி இறப்பிற்கு அஞ்சலி செலுத்த வடிவேலு வராதது பற்றிப் பேசியுள்ளார் நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ்.