இந்தியாவில் வேற எந்த தலைவனுக்கும் இந்த நெஞ்சுரம் இல்ல.. உதயநிதி ஸ்டாலின் தைரியசாலி: ஆ.ராசா ஆக்ரோஷம்!
சேலம்: “இந்தியாவில் எந்த அரசியல் தலைவனுக்கும் இல்லாத நெஞ்சுரம் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது. எத்தனை எதிர்ப்பு வந்தாலும் மண்டியிட மாட்டேன், நான் பெரியாரின் பேரன் என்றார் உதயநிதி” என திமுக எம்.பி ஆ.ராசா, சேலம் மாநாட்டில் உரையாற்றியுள்ளார்.
சேலத்தில் திமுக இளைஞரணியின் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முன்னணி தலைவர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி வருகின்றனர். அந்தவகையில், திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா, “திராவிட மாடல் – எல்லோருக்கும் எல்லாம்” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
ஆ.ராசா பேசுகையில், “அண்ணா தோற்றுவித்த இயக்கத்தில், அவர் 2 ஆண்டுகள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார். அதன்பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி சொன்னர், அண்ணா இருந்த இடத்திலே நான் இருக்கிறேன். அண்ணா வெண்ணெய், நான் சுண்ணாம்பு. என் பக்கத்தில் இருக்கிற நாவலர் வெற்றிலை ஆனால், என் அருகில் இருக்கும் பேராசிரியர் பாக்கு ஆனால், இந்த தமிழ்நாடு சிவப்பதற்கு நல்ல சுண்ணாம்பாக இருப்பேன் என்று தன்னடக்கத்தோடு குறிப்பிட்டார்.
அதன் பிறகு பொறுப்புக்கு வந்த நமது முதல்வர் ஸ்டாலின், “எனக்கு கருணாநிதி போல் பேசத் தெரியாது, கருணாநிதி போல் எழுதத் தெரியாது. ஆனால், அவர் போல உழைக்கத் தெரியும்” என்றார். அதையே மொன்மொழிந்த கருணாநிதி, “ஸ்டாலினிடத்திலே எனக்குப் பிடித்தது உழைப்பு, உழைப்பு, உழப்பு” என்று சொன்னார். அண்ணா நிறுவினார். கருணாநிதி சரித்திரம் படைத்தார். அவர் வழித்தோன்றலாக முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். அதற்குப் பிறகு இந்த இளைஞரணி மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார் அன்பு இளவல் உதயநிதி.
உதயநிதிக்கு 2 தகுதி போதும். ஒன்று, ஒரு தர்மத்தைப் பற்றிப் பேசினார். கடும் எதிர்ப்பு வந்தது. மண்டியிட மாட்டேன். சிலுவை என்றால் சிறை என்றால் தூக்கிச் சுமப்பதற்கு நான் பெரியாரின் பேரன், கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்று சொல்லும் மனப்பக்குவம் போதும்.
அதற்குப் பிறகு, மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டியது தவறு என்று சொல்வதற்கு இந்தியாவில் வேறு எந்தத் தலைவனுக்கும் நெஞ்சுரம் இல்லை, மனவலிமை இல்லை.