இன்று இரவு 10 மணிக்கு மேல் மெரினாவில் அனுமதி கிடையாது..! தண்ணீரில் இறங்க அனுமதியில்லை..!
காணும் பொங்கலையொட்டி பொழுதுபோக்கிற்காக பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சென்னை காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் கூடுதல் ஆணையர் தெற்கு பிரேம் ஆனந்த் சின்ஹா, வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது,” காணும் பொங்கலை ஒட்டி மெரினா, எலியட்ஸ், திருவான்மியூர், திரையரங்கு, பொருட்காட்சி ஆகிய இடங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும், மெரினா கடற்கரையில் மணல் பகுதியில் மட்டும் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தண்ணீரில் இறங்க அனுமதியில்லை” என கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்தார்.
சென்னையில் ஊர்காவல்படை சேர்த்து மொத்தம் 17 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், மெரினா கடற்கரையில் இரவு 10மணிக்கு மேல் பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடற்கரையில் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அவர்களின் கைகளில் டேக் அணிவிக்க உள்ளோம். டிரோன், பேஃஸ் ரெகைனைஷன் கேமரா மூலமாகவும், 17 வாட்ச் டவர்ஸ் மூலமாக கண்காணிப்பில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்தார்.’
இதனைத் தொடர்ந்து பேசிய போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர்,” புத்தாண்டின் போது ஒரு விபத்தும் நிகழாமல் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடப்பட்டது போல இந்த முறை விபத்தில்லா பொங்கல் கொண்டாடப்பட வேண்டும் என்பதே சென்னை காவல் துறையின் வேண்டுகோள்.
இதனால் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எல்.பி. சாலை, மெரினா, எலியட்ஸ் கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு வரும் வாகன ஓட்டிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பார்க்கிங் இடத்தில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
பொதுமக்கள் கூட்டத்தைப் பொறுத்து காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யக்கூடும் என அதை உடனுக்குடன் காவல்துறை வெப்சைட்டில் அறிவிப்பு வெளியிடும் என தெரிவித்தார்.
பைக் வீலிங், ரேஸிங் ஆகியவற்றை ஈடுபடுவோர்களைக் கண்காணிக்க 3168 சிசிடிவி கேமராக்கள் உள்ளதாகவும், அதன் மூலமாக உடனடியாக தகவல் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 18-ம் தேதி பொங்கல் விடுமுறை முடிந்து பொதுமக்கள் அனைவரும் சென்னைக்குத் திரும்ப உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் அதற்கேற்றாற் போல் சிறிது நேரத்தை மாற்றிக்கொள்ள வேண்டும், என கேட்டுக்கொண்ட அவர் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ” என்றார்.