இணையவழி தாக்குதல்களால் வடகொரியா கொள்ளையிட்ட ரூ 24,000 கோடி: ஐ.நா முன்னெடுக்கும் விசாரணை
கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா இணையமூடாக தாக்குதலை நடத்தி சுமார் 24,000 கோடி ரூபாய் கொள்ளையிட்டுள்ள விவகாரத்தில் தற்போது ஐ.நா நிபுணர்கள் தரப்பு விசாரணையை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2006ல் இருந்தே வடகொரியாவுக்கு தடை
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள தடைகளை வடகொரியா தொடர்ந்து மீறி வருவதாகவே கூறப்படுகிறது. அத்துடன் அணு ஆயுதங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.
கடைசியாக 2017ல் வடகொரியா அணு ஆயுத சோதனை முன்னெடுத்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் 2006ல் இருந்தே வடகொரியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.
இந்த நிலையிலேயே வடகொரியா முன்னெடுத்துள்ள சைபர் தாக்குதல்கள் குறித்து ஐ.நா நிபுணர்கள் குழு தரவுகளை வெளியிட்டுள்ளனர். 2017 முதல் 2023 வரையான காலகட்டத்தில் கிரிப்டோகரன்சி தொடர்பான நிறுவனங்கள் மீது வடகொரியா 58 முறை சைபர் தாக்குதல் முன்னெடுத்துள்ளதுடன், தோராயமாக 3 பில்லியன் டொலர் கொள்ளையிட்டுள்ளது.
சீனாவும் ரஷ்யாவும் கருத்து
இந்திய பண மதிப்பில் இது ரூ 24,800 கோடி என்றே கூறப்படுகிறது. குறித்த தொகையால் வடகொரியா அணு ஆயுத சோதனைகளை முன்னெடுத்து வருகிறது. ஆனால் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை வடகொரிய நிர்வாகம் மொத்தமாக மறுத்து வருகிறது.
வடகொரியா தொடர்பான இந்த ஆய்வறிக்கையானது இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றே கூறப்படுகிறது.
வடகொரியா மீது தடை விதிப்பதற்கு பதிலாக அந்த நாட்டை அணு ஆயுதமில்லாத நாடாக மாற்ற பேச்சுவார்த்தை முன்னெடுக்கலாம் என சீனாவும் ரஷ்யாவும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.