வயதானவர்கள் என்று கூட பார்க்காமல்.. பாத்ரூமை பூட்டி வைத்து.. இங்கிலாந்து நாட்டு ரசிகர்கள் வேதனை
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டியை காண வந்த இங்கிலாந்து நாட்டு ரசிகர்கள் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தால் வேதனையில் உள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர்கள் “பார்மி ஆர்மி” என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். அந்த அமைப்பு வெளிநாட்டில் நடக்கும் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் போட்டிகளை காண தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பார்கள். அவர்கள் மூலம் சுமார் 1000 இங்கிலாந்து ரசிகர்கள், இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரை காண வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள்.
இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் ஹைதராபாத் மைதானத்தில் தங்களுக்கு பெரும் அவமரியாதை மற்றும் வசதிக் குறைபாடுகள் இருப்பதாக அவர்கள் வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர். மைதான பாதுகாவலர்கள் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும், தண்ணீரை கூட எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை எனவும் கூறுகின்றனர்.
மேலும், வயதானவர்கள் என்றும் பாராமல் லிப்ஃட்டில் பயணிக்க அனுமதிக்காமல் படியில் ஏறிச் செல்லுமாறு கூறுகின்றனர். அதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாக வேண்டி இருந்தது. தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல அவர்கள் எங்களை அனுமதிக்காத நிலையில் உள்ளே அதை விற்கும் கடையிலும் பொருட்கள் இருப்பதில்லை. அதை வாங்கவும் நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள். அதை வாங்க சென்ற பலரால் போட்டியை பார்க்கவே முடியாமல் போகிறது. அப்படியே தேவையான பொருட்களை வாங்கினாலும், மீண்டும் வயதானவர்கள் படி ஏறி வர வேண்டும்.
மேலும், சானிடைசர், வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் சன் ஸ்க்ரீன் கிரீம் என எதையும் உள்ளே அனுமதிப்பதில்லை. அதைக் கூட ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், போட்டி துவங்கிய உடன் கழிவறையை பூட்டி வைத்து விடுகிறார்கள். அதனால், கழிவறையை தேடி அலைய வேண்டியதாக உள்ளது. அது குறித்து கேட்டாலும் ஊழியர்கள் எங்களை அலைக்கழிக்கும் வகையிலேயே நடந்து கொள்கிறார்கள் எனக் கூறினர்.
அப்படியே கழிவறை திறக்கப்பட்டு இருந்தாலும் அது பயன்படுத்தும் நிலையிலேயே இல்லை. இந்த நிலையில், முதல் நாள் போட்டியைக் காண சென்ற நாங்கள் இரண்டாம் நாள் மைதானத்துக்கு செல்ல வேண்டுமா? என யோசிக்க வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். அந்த மைதானத்தில் அதிகம் பணம் செலவு செய்வது நாங்கள் தான். ஆனால், எங்களுக்கு எந்த வசதியையும் செய்து கொடுக்க அவர்கள் தயாராக இல்லை எனக் கூறி உள்ளனர்.
ஏற்கனவே, ஹைதராபாத் மைதானத்தில் இருக்கைகள் பறவை எச்சத்துடன் இருக்கும் என்ற ஒரு பெயர் உள்ளது. 2023 உலகக்கோப்பை தொடரின் போது அந்த விமர்சனம் உச்சகட்டத்தை எட்டியது. தற்போது வெளிநாட்டு ரசிகர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. பிசிசிஐ இந்த புகாரை கண்டு கொள்ளுமா?