சிக்னலே கிடைக்கல கிடைக்கல.. சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நெட்வொர்க் பிரச்சனை.. நீதிபதிகள் விளக்கம்!
சென்னை: நீதிமன்ற வளாகத்தில் மொபைல் நெட்வொர்க்குகளை மேம்படுத்துவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மொபைல் போன்களை பயன்படுத்தும்போது போதிய நெட்வெர்க் கிடைக்கவில்லை என்பதால், நெட்வொர்க்கை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருமுல்லைவாயலை சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்சாண்டர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை, செப்டம்பர் மாதங்களில் தமிழக அரசு, உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டடங்களில் இருந்து மொபைல் போன்களில் இணையதள சேவையை பயன்படுத்த முடியவில்லை என்றும், காணொலி மூலமாக மற்றொரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக சிரமமாக இருப்பதாகவும், உயர் நீதிமன்ற இணையதளத்தின் முகப்புப் பக்கத்தை கூட முழுமையாக பார்க்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர், மனுதாரரின் கோரிக்கை உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளதால், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.