திரைத்துறைக்கு நல்லதல்ல: நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறன்!
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தின் நயன்தாராவின் 75-வது படமாக உருவானது அன்னபூரணி. இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த டிச.29 ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் பிராமண பெண்ணான அன்னபூரணியை (நயன்தாரா) அசைவம் சாப்பிட்ட வைப்பதற்காக நாயகன் ஃபர்ஹான் (ஜெய்), “வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமரும், லட்சுமணனும் விலங்குகளை வேட்டையாடி சீதாவுடன் சேர்ந்து உண்டனர்” என வசனத்தில் குறிப்பிடுவார்.
மத உணர்வுகள் புண்பட்டதாக இப்படத்தின் மீதும் நடிகை நயன்தாரா, ஜெய் மீதும் மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும், இப்படத்தை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனத்தையும் புறக்கணிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்ததால், நெட்பிளிக்ஸ் அன்னபூரணி படத்தை தளத்திலிருந்து நீக்கியது.
சர்ச்சையான கருத்துள்ள பல படங்கள் ஓடிடியில் இருந்தாலும் ராமர் குறித்த ஒரு தகவலுக்காக நெட்பிளிக்ஸ் அன்னபூரணி படத்தை நீக்கியது சரியல்ல என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன், “தணிக்கைச் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால், மத்திய தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுந்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது.
ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கைக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்” எனக் கூறியுள்ளார்.