வெறும் பணமல்ல.. டெஸ்ட் வீரர்களுக்கு பிசிசிஐ அளித்துள்ள மரியாதை இது.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!

பிசிசிஐ தரப்பில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மரியாதை தான் ஊக்கத்தொகை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அதிலும் கடைசி டெஸ்ட் போட்டியை இரண்டரை நாட்களில் இந்திய அணி முடித்து அசத்தியுள்ளது. 600 ரன்களை கூட விளாசுவோம் என்று கொண்டாட்டமாக பேட்டியளித்த பேஸ்பால் ஆடும் இங்கிலாந்து அணியை பொளந்து கட்டியுள்ளது இந்தியா.

அதேபோல் விராட் கோலி, ஷமி, கேஎல் ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் பலரும் இல்லாமலேயே இந்திய அணியிடம் வீழ்த்திருக்கிறது இங்கிலாந்து அணி. இந்த வெற்றிக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பிசிசிஐ ஒப்பந்தம், டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விளக்கமாக பதில் அளித்துள்ளார்.

அதில், பிசிசிஐ ஒப்பந்தத்தை பொறுத்தவரை தேர்வு குழுவினர் தான் முடிவு செய்கிறார்கள். ஒப்பந்தத்தை பெறுவதற்கான விதிகள் என்ன என்பது குறித்து கூட எனக்கு தெரியாது. நானும், ரோகித் சர்மாவும் இணைந்து இந்திய பிளேயிங் லெவனை மட்டுமே தேர்வு செய்வோம். அதனை கடந்து அவர்கள் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கிறார்களா என்பது பற்றி ஆலோசித்ததில்லை. பிசிசிஐ ஒப்பந்தம் பெற்ற வீரர்கள் யார் என்பது கூட எனக்கு இதுவரை தெரியாது.

இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் எப்போதும் இந்திய அணி நிர்வாகத்தின் திட்டங்களில் இருந்துள்ளார்கள். யாரையும் அவ்வளவு எளிதாக யாரும் புறந்தள்ளிவிட முடியாது. உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் அத்தனை வீரர்களும் நிச்சயம் தேர்வு குழுவின் திட்டத்தில் இருப்பார்கள். இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மீண்டும் ஃபிட்னஸை எட்டி, தேர்வு குழுவினரின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பிசிசிஐ-யின் ஊக்கத்தொகை அறிவிப்பு பற்றிய கேள்விக்கு, டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட பணம் கொடுப்பதை ஊக்கமாக கருத தேவையில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை தீவிரமாக விளையாடும் வீரர்களுக்கு மரியாதை என்று தான் கருத வேண்டும். அதிக பணம் கொடுப்பதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட வைக்க முடியாது. பிசிசிஐ அளித்த மரியாதையை மதிக்கிறேன். இதனை பணமாகவோ, ஊதியமாகவோ கருதாமல் ஊக்கமாகவும், மரியாதையாகவும் கருத வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *