ஒன்றல்ல… ரெண்டல்ல ..சளி, உயர் ரத்த அழுத்தத்துக்கான 46 மருந்துகள் தரமற்றவை..!
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 932 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, உயர் ரத்த அழுத்தம், வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 46 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டன.
இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, உயிர்ச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை.
எந்தெந்த மருந்துகள் தரமற்றவை என்பது குறித்த முழு விவரங்களை https://cdsco.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம். சம்மந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுப்போன்று மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.