தண்ணீர் கேன் மட்டுமல்ல அரசி மூட்டையகூட இதுல ஏத்திட்டு போகலாம்… எக்ஸ்எல்லையே தூக்கி சாப்பிடும் போலிருக்கே!
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தி நிறுவனங்களில் கோமகி (Komaki)-யும் ஒன்று. இந்த நிறுவனமே டிவிஎஸ் எக்ஸ்எல் (TVS XL) மொபட்டிற்கு டஃப் கொடுக்கக் கூடிய ஓர் மொபட்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
இதன் சிறப்பு என்னவென்றால், பார்க்க மொபட்டை போல இருக்கும் இந்த வாகனத்தை ஆட்டோவைபோல பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுதவிர இது ஓர் எலெக்ட்ரிக் வாகனம் என்பது அதன் கூடுதல் சிறப்பாகும். இந்த வாகனத்திற்கு கோமகி எக்ஸ்ஜிடி சிஏடி இ-லோடர் (Komaki XGT CAT 3.0 e-loader) என்கிற பெயரை கோமகி சூட்டி இருக்கின்றது.
மேலும், இந்த வாகனத்தை ஆட்டோரிக்ஷாவை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாகவே மூன்று வீல்கள் அந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், சுமார் 500 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை இதில் ஏற்றி செல்ல முடியும். இந்த அதிக பாரத்தை தாங்க ஏதுவாக வாகனத்தின் பின் பக்கத்தில் லோடு ஏற்றுவதற்கு என்றே தனி உலோக கேரியர் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், 12 அங்குல பெரிய வீல்களும் மொபட்டில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மொபட் வகை எலெக்ட்ரிக் வாகனத்தை கமர்சியல் மற்றும் தனிப்பட்ட பயன்பாடு என இரண்டிற்குமான வாகனமாக உபயோகித்துக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. இதுதவிர, இந்த வாகனத்தை கால்கள் மாற்று திறனாளிகளாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இது ஓர் யூசர் ஃப்ரண்ட்லி எலெக்ட்ரிக் வாகனம். இதனை இயக்க தனிப்பட்ட பயறிசி தேவையில்லை என்றும் ஏற்கனவே மோட்டார்சைக்கிளை ஓட்டிய அனுபவம் இருந்தாலே போதும் என்று நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. நீண்ட நேர பயணத்தின்போது சாய்ந்து கொண்ட பயணிக்க ஏதுவாக இந்த மொபட்டில் சாயும் பேட் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர அதிக பொதிகளை ஏற்றிச் செல்ல ஏதுவாக முன் பக்கத்தில் கால் வைக்கும் இடத்திலும் இட வசதிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. எனவே அதிக சரக்குகளை இதில் தாராளமாக ஏற்றிச் செல்ல முடியும். இதுதவிர சிறப்பு மற்றும் நவீன கால அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில் ரைடர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக மூன்று வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த வாகனத்தில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ முதல் 180 கிமீ வரையில் ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், துள்ளியமான ரேஞ்ஜ் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை.
காரணம், லோடை பொருத்து ரேஞ்ஜ் திறன் மாறும் என்பதால் தோராயமான ரேஞ்ஜ் திறன் பற்றிய விபரத்தை மட்டுமே கோமகி வெளியிட்டு இருக்கின்றது. மேலும், இதை முழுமையாக சார்ஜ் செய்ய 1 முதல் 1.5 யூனிட்டுகள் மட்டுமே மின்சாரம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இதன் சிறந்த இயக்கத்திற்காக மிட்-டிரைவ் மோட்டாரே கோமகியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், பார்க்கிங் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், இன்க்லைன் லாக்கிங் வசதிக் கொண்ட பிரேக் லிவர் உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, இந்த வாகனத்தில் செல்ஃப் டைக்னாஸ், ஒயர்லெஸ் அப்டேட், விவிட் ஸ்மார்ட் டேஷ் ஆகியவையும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், பன்முக சென்சார்கள், ரிமோட் வாயிலாக லாக் செய்யும் வசதி, செல்போன் சார்ஜர், டெலிஸ்கோபிக் ஷாக், ரிப்பேர் ஸ்விட்ச் மற்றும் திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட இ-லோடு வாகனத்தையே கோமகி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 1.06 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.