`முதலீட்டை ஈர்க்க அல்ல; முதலீடு செய்வதற்காகவே சென்றிருக்கிறார்!’ – முதல்வரைச் சாடும் இபிஎஸ்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அ.தி.மு.க சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் வந்தார்.
வல்லம் பிரிவு சாலையில் 65 அடி உயர கம்பத்திலான அ.தி.மு.க கொடி ஏற்றுவதற்கான ஏற்பாட்டை மாநகர செயலாளர் சரவணன் செய்திருந்தார். கொடியை ஏற்றி வைத்த எடப்பாடி பழனிசாமிக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். சமாதான புறாவை பறக்கவிட்ட எடப்பாடி பழனிசாமிக்கு ஏர்கலப்பை, வீரவாள் போன்றவை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, நான் முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என கிராமத்தில் சொல்வார்கள். அடுத்த தேர்தலின் வெற்றி முகம் இந்த கூட்டத்தில் தெரிகிறது. அடுத்து வருகின்ற தேர்தல், நமக்கு வெற்றி தேர்தலாக அமையும். தஞ்சாவூரில் இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது எதிரிகள் நமக்கு எதிரே இல்லை என்பதை காட்டுகிறது. எவ்வளவோ துரோகம் செய்து அ.தி.மு.கவை அழிக்க பார்த்தார்கள், முடக்க பார்த்தார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலிதா ஆசியுடன் அத்தனையும் ஒழித்து கட்டப்பட்டு விட்டன.
நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பை பெற்றோம், தேர்தல் ஆணையத்தின் மூலம் நல்ல தீர்வை கண்டோம். இனி அ.தி.மு.கவை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. நமக்கு யார் கெடுதல் நினைத்தாலும் அவர்கள் தான் கெட்டுப்போவார்கள். அ.தி.மு.கவை அழிக்க நினைத்தார்கள் அழிந்து போனார்கள், கெடுக்க நினைத்தார்கள் கெட்டுப்போனார்கள்… இதுதான் இன்றைய நிலை. அ.தி.மு.க-வில் யார் உழைக்கிறார்களே அவர்கள் உச்சபட்ச நிலையை அடைய முடியும். கிளை செயலாளராக இருந்த நான் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். எதிர்காலத்தில் நீங்களும் வரலாம் இது அ.தி.மு.கவில் மட்டும்தான் முடியும். அ.தி.மு.கவில் உழைப்புக்கு மரியாதை உண்டு, விசுவாசத்திற்கு மரியாதை உண்டு.