இனி ஒருவருக்கு 4 குவாட்டர் மட்டும் தான் – டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு..!

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க வருபவர்களுக்கு அரசியல் கட்சியினர் குவாட்டரும், கோழி பிரியாணியும் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால் மது விற்பனை அமோகமாக இருக்கும். மேலும் சில இடங்களில் வாக்காளர்களுக்கு மது வாங்கி கொடுக்கும் நிகழ்வுகளும் நடைபெறும். இதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அதில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது உள்ளிட்ட வழிமுறைகள் பின்பற்ற மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள காலங்களில் டாஸ்மாக் கடைகளில் 50 சதவீதத்துக்கு மேல் மது வகைகள் இருப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மது விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 30 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தால் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தும், எனவே கடையின் சராசரி விற்பனை 30 சதவீதத்துக்கு மேற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மதுபானங்களை மொத்தமாக விற்கக்கூடாது. ஒரு நபருக்கு 4 குவாட்டருக்கு மேல் விற்கக்கூடாது. அரசு அனுமதித்த மதியம் 12 மணி இரவு 10 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் இயங்க வேண்டும். பார்களில் மதுபானம் இருக்க கூடாது, அப்படி இருந்தால் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை செய்யப்படும் மது வகைகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். கடையில் உள்ள 21 பதிவேடுகளையும் தினசரி முறையாக பராமரிக்க வேண்டும். மதுபானங்கள் விற்பனையை பணமில்லா பரிவர்த்தனை மூலம் ஊக்கப்படுத்த வேண்டும். டோக்கன் மற்றும் கூப்பன்களுக்கு மதுபானங்களை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது.

தினந்தோறும் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் விற்பனை புள்ளிக்கும், வங்கியில் செலுத்தப்படும் விற்பனை தொகைக்கும் வேறுபாடு இருக்க கூடாது. 90 நாட்களுக்கு மேற்பட்ட மதுபானங்கள் கடைகளில் இருப்பு இருக்க கூடாது. மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட மேலாளர்கள் விற்பனையை தொடர்ந்து கண்காணித்து வாராந்திர அறிக்கைகளை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

மேலும், மதுபான கையிருப்புகளை ஏற்றிச் செல்லும் அனைத்து லாரிகளிலும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக்’ கடைகள் மற்றும் பார்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அவற்றின் காட்சி பதிவுகள் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *