இனி வானிலை நிலவரங்களை துல்லியமாக பெறலாம்..!

உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை இதுவரை இல்லாத வகையில் விரிவாக ஆய்வு செய்வதற்காக பேஸ் என்ற புதிய காலநிலை செயற்கைகோளை நாசா இன்று விண்ணில் செலுத்தியது. கேப் கனவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைகோள் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இது, பூமியில் இருந்து 420 மைல்கள் உயரத்தில் பறந்தபடி கடற்பகுதி மற்றும் வளிமண்டலத்தை சுமார் 3 ஆண்டுகள் ஆய்வு செய்யும். இதில் 3 அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு கருவிகள் மூலம் தினமும் பூமி துல்லியமாக படம்பிடிக்கப்படும். மூன்றாவது கருவி மூலம் மாதாந்திர அளவீடுகள் எடுக்கப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியை இந்த செயற்கைகோள் தெளிவாக காட்டும் என திட்ட விஞ்ஞானி ஜெர்மி வெர்டெல் தெரிவித்தார்.

சூறாவளி மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக தெரிவிக்கவும், வெப்பநிலை அதிகரிக்கும்போது பூமியின் மாற்றங்களை விவரிக்கவும், தீங்கு விளைவிக்கும் பாசிகள் எப்போது பூக்கும் என்பதை கணிக்கவும் இந்த செயற்கைக் கோள் மூலம் கிடைக்கும் தரவுகள் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாசா ஏற்கனவே 20-க்கும் அதிகமான பூமி கண்காணிப்பு செயற்கைகோள்களையும் கருவிகளையும் சுற்றுப்பாதையில் நிறுத்தி ஆய்வு செய்கிறது. ஆனால் மாசுக்கள் மற்றும் எரிமலை சாம்பல் போன்ற வளிமண்டல ஏரோசோல்கள் மற்றும் பாசி மற்றும் பிளாங்க்டன் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன என்பது பற்றிய தெளிவான தகவலை பேஸ் வழங்கும்.

தற்போதைய பூமி கண்காணிப்பு செயற்கைகோள்களால் 7 அல்லது 8 வண்ணங்களில் பார்க்க முடியும். ஆனால் பேஸ் செயற்கைகோள் 200 வண்ணங்களில் பார்க்கும். இதன்மூலம் கடலில் உள்ள பாசி வகைகளையும் காற்றில் உள்ள துகள்களின் வகைகளையும் விஞ்ஞானிகள் அடையாளம் காண முடியும். செயற்கைகோளில் இருந்து இன்னும் ஓரிரு மாதங்களில் தரவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாசா இந்த ஆண்டு இந்தியாவுடன் இணைந்து மற்றொரு மேம்படுத்தப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைகோளை செலுத்த உள்ளது. நிசார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள், ரேடாரைப் பயன்படுத்தி பனிப்பாறைகள் மற்றும் பிற உருகும் பனிப்பரப்புகளில் உயரும் வெப்பநிலையின் விளைவை அளவிடும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *