கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நௌக்ரி, 99 ஏக்கர் மற்றும் பல செயலிகள் நீக்கம்..!
தனது கட்டண கட்டமைப்பை அமல்படுத்த அல்லது இணங்காத பல பிரபலமான செயலிகளை கூகுள் தங்களது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. கூகுள் நிறுவனத்திடமிருந்து பயனடைந்த போதிலும் கட்டணம் செலுத்துவதைத் தவிர்த்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் செல்போன் பயன்பாடுகள் சேவைகள் அதாவது நௌக்ரி செயலி, வேலைவாய்ப்பு தேடல் செயலி, நௌக்ரி பணியமர்த்துபவர், நௌக்ரி கல்ஃப் வேலை தேடல் செயலி, 99 ஏக்கர் செயலி மற்றும் பிரபலமான பாரத் மேட்ரிமோனி போன்ற பத்து செயலிகளை கூகுள் தங்களது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளதாக இன்ஃபோ எட்ஜ் லிமிடெட் பிஎஸ்இ-க்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கூகுள் உரிய மற்றும் போதுமான அறிவிப்பை வழங்காமல் இந்த நடவடிக்கை கையாண்டது ஆச்சரியமாக உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே தங்கள் செல்போன் சாதனங்களில் அதன் பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்த பயனர்கள் தொடர்ந்து எங்கள் செயலிகளை பயன்படுத்தலாம் என்று இன்ஃபோ எட்ஜ் தெளிவுபடுத்தியது.
கூடுதலாக பிற தளங்கள் வழியாக ஆதாவது ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது சம்பந்தப்பட்ட வலைதளங்கள் மூலம் பயன்பாடுகளைப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களும் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் செல்போன் பயன்பாடுகள் கூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் நிறுவப்படுவதை உறுதி செய்வதற்காக, நிறுவனம் அடுத்த கட்ட நடவடிக்கையை செய்து வருகிறது என்று பிஎஸ்இ-க்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இன்ஃபோ எட்ஜ் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி கூறுகையில், தற்போது நிலுவையில் உள்ள அனைத்து இன்வாய்ஸ்களையும் உரிய நேரத்தில் கட்டி முடித்துவிட்டதாகவும், கூகுள் கொள்கைகளுக்கு இணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.