Nungu Benefits : கோடை சீசனில் நுங்கு ஏன் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் தெரியுமா..? அதன் நன்மைகள் இதோ!!
‘நுங்கு’ வை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை. இது கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் ஒரு பழம் ஆகும். இது ஆங்கிலத்தில் “ஐஸ் ஆப்பிள்” என்றும் அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு லிச்சியைப் போன்று இருக்கும். ஆனால் இதன் சுவையோ தேங்காய் தண்ணீர் போல் மிகவும் சுவையாக இருக்கும். உண்மையில் இது கோடையில் உடலுக்கு ஐஸ் கட்டி போல குளுமையைத் தரும் என்றால் மிகை அல்ல. இது கோடைகாலத்தில் மட்டுமே விற்பனையாகும் என்பதால், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இது இந்தியாவின் தென் பகுதிகளில் தான் மிகவும் பிரபலமானது.
இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இப்பழம் குறைந்த கலோரிகளைக் கொண்டது. மேலும் இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். எனவே, நுங்கு ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவையே:
உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்: கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில், நம் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்பு அதிகம். அத்தகைய சூழ்நிலையில், நுங்கு சாப்பிட்டால் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமின்றி, இயற்கையான முறையில் நீரிழப்பு சமாளிக்க உதவுகிறது.
செரிமான பிரச்சனைகளை குறைக்கும்: நுங்கு அமிலத்தன்மை, வயிற்று புண்கள், எரியும் உணர்வு போன்ற பல்வேறு வயிற்று பிரச்சனைகளை குறைக்க பெரிதும் உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர், அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நுங்கு சாப்பிடுவது மிகவும் நல்லது.
எடை குறைக்க உதவும்: நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் நுங்கு உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். இதில் அதிக அளவு தண்ணீர் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும், இதன் காரணமாக உங்களுக்கு பசி எடுக்காது. மேலும் இதில் குறைந்த கலோரிகள் உள்ளது.
சருமத்திற்கு பாதுகாப்பு: கோடை வெயில் தாக்கத்தால் உடலில் வியர்க்குரு உஷ்ணக் கட்டிகள் தோல் சிவத்தல் தடிப்புகள் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும். இதனை போக்கும் தன்மை நுங்குக்கு உண்டு. எனவே, இந்த கோடையில் கண்டிப்பாக நுங்கு சாப்பிடுங்கள். அதுமட்டுமின்றி நுங்கு நீரை உஷ்ணக் கட்டிகள் மற்றும் வியர்க்குரு மீது தடவினால் அவை மறையும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுங்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி சர்க்கரை நோயாளிகளின் உடலில் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க இது உதவும். மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்வது மட்டுமின்றி, எலும்புகள் மற்றும் கண்பார்வை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
கல்லீரலை பாதுகாக்கும்: நுங்கில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உடலில் ஏற்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது மற்றும் பலப்படுத்துகிறது.