NZ vs AUS : சோலி முடிஞ்ச்.. 2 சிஎஸ்கே வீரர்களால் ஆட்டமே மாறிப்போச்சு.. திணறிப்போன கம்மின்ஸ், ஸ்மித்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரல் மிட்செல் இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்றதால், நியூசிலாந்து அணி கட்டாய வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி ஹேசல்வுட்டின் அபார பவுலிங்கால் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் லபுஷேனின் அபார ஆட்டத்தால் 256 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய லபுஷேன் 90 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 94 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதன்பின் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 134 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து களத்தில் இருந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற 3வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் டாம் லேதம் 73 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 82 ரன்களும், டேரல் மிட்செல் 58 ரன்களும் விளாசினர். இதன் காரணமாக நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 372 ரன்களை குவித்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 279 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் ஆஸ்திரேலியா அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் – கவாஜா கூட்டணி களமிறங்கியது. அதில் ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்களிலும், தொடர்ந்து வந்த லபுஷேன் 6 ரன்களிலும், கவாஜா 11 ரன்களிலும், கேமரூன் க்ரீன் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த டிராவிஸ் ஹெட் – மிட்செல் மார்ஷ் இருவரும் நிதானமாக விளையாடினர்.
இதனால் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் 4வது நாள் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் இருவரும் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.