TV நேரலையில் பங்கேற்று கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்த அதிகாரி மரணம்
தொலைக்காட்சி நேரலையில் பங்கேற்ற வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நேரலையில் பங்கேற்பு
இந்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் மூலம் பிராந்திய மொழிகளில் தொலைக்காட்சி சேனல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கேரள மாநிலத்தில் தூர்தர்ஷன் சேனலில் விவசாயம் சார்ந்த நேரலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் அனி எஸ். தாஸ் ( 59) பங்கேற்றிருந்தார். நேற்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சியில், கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்து கொண்டு இருந்தார்.
மயங்கி விழுந்து மரணம்
இந்நிலையில், திடீரென எஸ். தாஸ் மயங்கி விழுந்தார். அப்போது அதிர்ச்சியடைந்த தொலைகாட்சி ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் அனி எஸ், தாஸ், கேரள வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஆவார். நேரலையில் பங்கேற்று கொண்டிருக்கும் போதே உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.