சந்தையில் எப்படியாச்சும் ஆணி அடிச்ச மாதிரி ஒக்காந்திரனும்.. பைக்குகளின் விலையை அதிரடியாக குறைத்த சீன பிராாண்ட்

இந்தியாவில் கால் தடம் பதித்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் க்யூஜே மோட்டார் (QJ Motor)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே இந்தியாவில் தன்னுடைய ஆதிக்கத்தை பெருக செய்யும் விதமாக தன்னுடைய தயாரிப்புகளின் விலையைக் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் க்யூஜே மோட்டார் (QJ Motor)-ம் ஒன்றாகும். இது ஓர் சீனாவைச் சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்தியாவில் நான்கு விதமான இருசக்கர வாகன மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது.
எஸ்ஆர்சி 250, எஸ்ஆர்சி 500, எஸ்ஆர்வி300 மற்றும் எஸ்ஆர்கே 400 ஆகியவற்றையே அது விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றின் விலையிலேயே ரூ. 40 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. இந்த மாபெரும் விலை குறைப்பு விற்பனையை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
சீனா நிறுவனம் இந்தியாவில் வெற்றிகரமாக கால்தடம் பதித்து இருந்தாலும், அதன் தயாரிப்புகள் இந்தியர்களைப் போதிய அளவில் கவரவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்த நிலையிலேயே க்யூஜே மோட்டார் இந்தியாவில் தன்னுடைய ஆதிக்கத்தை வேறூன்ற என்பதற்காக விலை குறைப்பு எனும் தாரக மந்திரத்தைக் கையில் எடுத்து இருக்கின்றது.
க்யூஜே எஸ்ஆர்சி 250, எஸ்ஆர்சி 500 மற்றும் எஸ்ஆர்வி 300 ஆகிய மாடல்களின் விலையை மட்டுமே க்யூஜே குறைத்திருக்கின்றது. எஸ்ஆர்சி 250 மோட்டார்சைக்கிள் முன்னதாக ரூ. 2.1 லட்சத்திற்கு விற்கப்பட்டு வந்தது. இதன் விலையில் ரூ. 31 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கின்றது.
ஆகையால், தற்போது இந்த பைக்கின் விலை ரூ. 1.80 லட்சமாக குறைந்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். க்யூஜே எஸ்ஆர்சி 250, ராயல் என்பீல்டு கிளாசிக் 350க்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல் ஆகும். இந்த பைக்கில் 17 பிஎச்பி மற்றும் 17 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
சில்வர், பிளாக் மற்றும் ரெட் ஆகிய நிறங்களில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக எஸ்ஆர்சி 500 ன் விலையில் ரூ. 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக் மாடல் நிற தேர்விற்கு ஏற்ப மாறுபட்ட விலையில் விற்கப்படுகின்றது.
ரூ. 2.69 லட்சம் தொடங்கி ரூ. 2.79 லட்சத்திற்கு அது விற்கப்படுகின்றது. தற்போது ரூ. 2.39 லட்சம் மற்றும் 2.49 லட்சம் ரூபாய் என்கிற விலையில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த பைக்கில் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 மற்றும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350க்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதேபோல், எஸ்ஆர்வி 300 மாடலின் விலையிலும் பெரும் தொகைக் குறைக்கப்பட்டு இருக்கின்றது. வி-ட்வின் ரக எஞ்சினைக் கொண்ட ஒரே க்யூஜே தயாரிப்பு இது ஆகும். இந்த வாகனம் கீவே பெண்டா வி302சிக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 3.49 லட்சம் ஆகும். இந்த விலையில் ரூ. 40 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கின்றது.