டிசைன் டிசைனா ஏமாத்துறாங்கப்பா.. நடிகர்கள், இன்ஃபிளூயன்சர்களை டார்கெட் செய்யும் ஓலா கார் ஓட்டுநர்!
மும்பை: இந்தியாவின் நிதியியல் தலைநகரான மும்பையை சேர்ந்த ஒரு ஓலா கார் ஓட்டுநர் நடிகர்கள் மற்றும் இன்ஃபிளூயன்சர்களை ஏமாற்றி பணம் பெற்று மோசடி செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னை, மும்பை போன்ற இந்தியாவின் பிரதான நகரங்களில் மக்கள் பெரும்பாலும் தனியார் கார் அல்லது ஆட்டோக்களையே நம்பியுள்ளனர். ஓலா, உபர், ரேபிடோ நிறுவனங்கள் பைக், ஆட்டோ மற்றும் கார் வாடகை சேவைகளை வழங்குகின்றன.
அப்படி ஓலா நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணியில் இருந்த ஒரு நபர் வாடிக்கையாளர்களிடம் உணர்வுப்பூர்வமாக பேசி பணம் பறித்து வந்தது தெரிய வந்திருக்கிறது.
அனிஷா தீக்சித் என்ற இன்ஃபிளூயன்சர், கடந்த மாதம் ஓலாவில் கார் புக் செய்து பயணித்துள்ளார். அப்போது கார் ஓட்டுநர் திடீரென சத்தமாக அழுதுள்ளார். ஏன் அழுகிறீர்கள் என கேட்டதற்கு, தனது தந்தை கிராமத்தில் இறந்துவிட்டதாகவும், தன்னுடைய பர்ஸையும் யாரோ திருடிவிட்டனர் என்றும் கூறியுள்ளார் அந்த ஓட்டுநர்.
சொந்த ஊருக்கு செல்ல பணம் இல்லாமல் தவிப்பதாகவும் தற்கொலை எண்ணம் வருவதாகவும் கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த அனிஷா தீக்சித் காரை ஓரமாக நிறுத்துங்கள் என கூறியுள்ளார். காரில் இருந்து இறங்கி கணவருக்கு போன் செய்துள்ளார், ஆனால் அதற்குள் காரை எடுத்து கொண்டு ஓட்டுநர் தப்பியுள்ளார்.
இது புது வகையான மோசடியா என சந்தேகித்து வீடியோ பகிர்ந்துள்ளார். அப்போது தான் பலரும் இந்த ஓட்டுநரால் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்தது தெரிய வந்துள்ளது. நடிகர் ராதிகா பாங்கியா, இதே ஓட்டுநர் தன்னுடைய மகனுக்கு உடல்நிலை சரியில்லை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது என தன்னிடம் அழுது புலம்பி 8 ஆயிரம் ரூபாயை பெற்றதாக கூறியுள்ளார்.
நடிகர் அஞ்சலி சிவராமன், தன்னிடமும் இந்த ஓலா கார் ஓட்டுநர் பணம் கேட்டதாகவும் இது பற்றி ஓலாவில் புகாரளித்தும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இப்படி மும்பையை சேர்ந்த ஏராளமானவர்கள் இவரிடம் பணம் தந்து ஏமாந்தது பற்றி வீடியோவில் கமெண்ட் மூலம் தெரிவித்துள்ளனர், இது புது வகையான மோசடி என்றும், இது போன்ற நபர்களால் , உண்மையிலேயே கஷ்டத்தில் இருப்பவர்கள் பணம் கேட்டால் கூட நம்மால் தர முடியாத சூழல் ஏற்படுகிறது என கூறுகின்றனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதலே இந்த நபர் இப்படி மோசடி செய்து வந்ததாகவும் தற்போது ஓலா அவரை பணி நீக்கம் செய்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இருப்பினும் மக்கள் இது போன்ற மோசடி நபர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.