இ-பைக் டேக்ஸி சேவையைத் தொடங்கும் ஓலா… வெளியான கட்டண விவரங்கள்!

வாடகை கார் மற்றும் மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் ஓலா நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, புதிய மின்சார பைக் டேக்ஸி சேவையை ஓலா தொடங்கியுள்ளது. முன்னதாக, தலைமையிடமான பெங்களூருவில் சோதனையைத் தொடங்கிய நிறுவனம், தற்போது பிற பெருநகரங்களுக்கும் விரிவுபடுத்த ஆயத்தமாகி உள்ளது.
முதற்கட்டமாக டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த இரண்டு மாதங்களில் 10 ஆயிரம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சாலைகளில் களமிறக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது சாத்தியப்படும் போது ஓலா தான் நாட்டின் மிகப்பெரும் எலெக்ட்ரிக் பைக் நிறுவனமாகத் திகழும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மின்சார ஸ்கூட்டர் வாடகை பயணத்திற்கான கட்டணத்தையும் ஓலா வெளியிட்டுள்ளது.
அதன்படி, முதல் 5 கிலோமீட்டர் தூர பயணத்திற்கு ரூ.25 எனவும், 10 கிலோமீட்டருக்கு 50 ரூபாய் எனவும், 15 கிலோமீட்டருக்கு 75 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. குறைந்த விலையில் வாடகை பைக் சேவையை வழங்கமுடியும் என்பதை ஓலா இதன் வாயிலாக நிரூபித்துள்ளது. இது வெற்றியடையும் போது, சேவை நாடு முழுவதிலும் விரிவுப்படுத்தப்படும் என்று நிறுவனம் உறுதிப்பட தெரிவித்துள்ளது.
புதிய இ-பைக் டேக்ஸி சேவை அறிமுக நிகழ்வில் பேசிய ஓலா மொபைலிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஹேமந்த் பக்சி, “மின்சார பைக்குகளால் மட்டுமே இந்த மலிவு விலை வாடகை சேவையை வழங்க முடியும். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் இந்த சேவை பயனளிக்க வேண்டும். பெங்களூரு இ-பைக் டாக்ஸி சோதனையின் (பைலட் திட்டம்) மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, சேவையை விரிவுப்படுத்தத் தொடங்கியுள்ளோம். இது மலிவானப் பயணம், புதிய வருவாய், சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணம் போன்றவற்றிற்கு திறவுகோலாக உள்ளது. பின்னாளில் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும் இந்த சேவை உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம்,” என்று கூறினார்.
நிறுவனம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், ஓலா மொபிலிட்டி தனது பைலட் திட்டத்தை செப்டம்பர் 2023 முதல் பெங்களூரில் செயல்படுத்தி வருகிறது. அன்றுமுதல் இன்றுவரை 1.75 மில்லியனுக்கும் அதிகமான பயணங்களை நிறைவு செய்துள்ளது. மேலும், பெங்களூரு நகர் பகுதிகளில் மொத்தம் 200 சார்ஜிங் நிலையங்களை நிறுவனம் கொண்டுள்ளது.
ஓலா பைக்குகளை தேவையான இடங்களில் ரீசார்ஜ் செய்துகொள்ள இந்த நிலையங்கள் உதவியாக இருக்கிறது. ஓலா செயல்படத் திட்டமிட்டுள்ள அனைத்து சந்தைகளிலும் விரிவான சார்ஜிங் நெட்வொர்க்கை உருவாக்கும் என அறிக்கையில் உறுதி அளித்துள்ளது. நாடு முழுவதும் இ-பைக் வாயிலாக ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்ய தயாராகி வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.