`ஓம் சக்தி… பராசக்தி’ கோஷம் முழங்க கூடலூர் சந்தைக்கடை மாரியம்மன் கோயில் கோலாகல கும்பாபிஷேக விழா!
வணிகம் செழிக்கவும், கொள்ளை நோய்களில் இருந்து மக்களைக் காக்கும் சக்தி வாய்ந்த அம்மனாக நீலகிரி மக்களால் போற்றி வணங்கப்படும் இந்த ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில், மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கும்பாபிஷேகம்
மஹா கும்பாபிஷேக விழா கடந்த 13 -ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரிகளைத் தலையில் ஏந்தி நகரில் ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து முதற்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 14 – ம் தேதி பகல் 12 மணிக்கு 2- ம் கால யாகசாலை பூஜையும், இரவு 9 மணிக்கு விநாயகர், அம்மன் உள்பட பரிவார தெய்வங்களின் விக்ரகங்களுக்கும் யந்திர ஸ்தாபனமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து 4- ம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன. 7 மணிக்கு கலச புறப்பாடு நடைபெற்றது. பின்னர் நடுகூடலூர் விநாயகர் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.