ஆம்னி பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்த அனுமதி..!
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும், புதிதாக துவங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24-ஆம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்களும், ஆம்னி பேருந்து சங்கமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசுத்தரப்பில், சென்னை நகரில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும் வழித்தடங்களின் இரு வரைபடங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம். கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதற்கு கட்டப்பட்டது என்ற கேள்வி எழும் என்றும், ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கரில் பரப்பில் ஆம்னி பேருந்துகளுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என உறுதி தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.