வெளியேற்றப்பட்ட ஆம்னி பேருந்துகள்.. வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்- பொதுமக்கள் அவதி

கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டதையடுத்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் ஜனவரி 24 ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுவதற்கு பதிலாக கிளம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கிளாம்பாக்கத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தால் அங்கிருந்து பேருந்துகளை இயக்க முடியாது எனவும் கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும் என கூறினர். மேலும் மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் இயக்கப்பட்ட பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என கூறினர்.

கோயம்பேட்டில் அனுமதி மறுப்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து துறையினர் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என உறுதியாக இருந்தனர். இதன் காரணமாக நேற்று மாலை முதல் ஆம்னி பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 7:30 மணி முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அனுமதிக்க மறுத்தனர். பேருந்து நிலையம் வந்த பயணிகளை கிளாம்பாக்கம் செல்லும்படி அறிவுறுத்தினர். இதனால் பயணிகள் பலர் கடும் இன்னல்களுக்குள்ளானார்கள். அதிகப்படியான லக்கேஜ் உடன் வந்த பயணிகள் சி.எம்.டி.ஏ அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கிளாம்பாக்கத்திற்கு சிறப்பு பேருந்து

இதயடுத்து கோயம்பேடு வந்த பயணிகளை சென்னை மாநகர பேருந்துகள் மூலம் கிளாம்பாக்கத்துக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட்டனர். இருந்த போதும் தொடர் விடுமுறை காரணமாக அதிகப்படியான பொதுமக்கள் கோயம்பேடு பகுதிக்கு வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் உரிய திட்டமிடாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டதாவும் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக விளக்கம் அளித்த சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, கடந்த மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

அனைத்து வசதிகளும் உள்ளது

பொங்கல் பண்டிகைக்கு பிறகு கிளாம்பாக்கத்திற்கு மாறி விடுவோம் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால் தற்போது ஏன் மாற்றி பேசுகிறார்கள் என தெரியவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான வசதி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு போதுமான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். இதனிடையே கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டதையடுத்து பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *