ஜனவரி 22ம் தேதி 140 கோடி இந்திய மக்களும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் : ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் வேண்டுகோள்!!

ஜனவரி 22ம் தேதி வீடுகளில் விளக்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. ஜனவரி 22ஆம் தேதி நண்பகல் 12.20 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.
இதையடுத்து ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜனவரி 22ம் தேதி வீடுகளில் விளக்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்ரீ ராம ஜோதியை ஏற்றுங்கள் … !
வருகின்ற 22ம் தேதி அயோத்தியா புண்ணிய பூமியில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ராமர் சிலை நிறுவப்படுகிறது.
இந்தியாவில் இருக்கும் 140 கோடி மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தாழ்மையுடன் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதை நாம் அனைவரும் செய்வோம் என்று உறுதி அளிப்போம்.
ஜெய் ஸ்ரீ ராம் …!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.