ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தலாம்: குடியரசுத் தலைவரிடம் அறிக்கையை சமர்ப்பித்த உயர் மட்ட குழு!

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி மத்திய அரசு அமைத்தது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகவும், சட்ட செயலாளர் நிதன் சந்திரா குழுவின் செயலாளராகவும் இருந்தனர்.

இதையடுத்து, தங்களது பணியை தொடங்கிய உயர்மட்ட குழு, ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சிகளிடம் கடுத்துக்களை கேட்டது. இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தங்களது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்துள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, 18,626 பக்கங்களை கொண்ட விரிவான அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் நேரில் சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என அந்த குழு பரிந்துரைத்துள்ளது. “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குழு ஒருமனதாகக் கருதுகிறது.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொங்கு நாடாளுமன்றம்/சட்டமன்றம், நம்பிக்கையில்லா தீர்மானம், கட்சித் தாவல் அல்லது வேறு ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளையும் அக்குழுவினர் தங்களது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளனர். மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்பு மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களுக்கு செல்லுபடியாகும் வாக்காளர்களுக்கான ஒற்றை வாக்காளர் பட்டியல் மற்றும் அடையாள அட்டை ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தேவை என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசி வருகிறார். 2014 மக்களவைத் தேர்தலலின்போது, பாஜவின் தேர்தல் வாக்குறுதியாகவும் ஒரே நாடு, ஒரே தேர்தல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *