25கிமீ-க்கு ஒரு இவி சார்ஜிங் நிலையம்!! நம்ம தமிழ்நாடு அரசு கூட இப்படி யோசிக்கல… அதிரடியான செயலில் கேரள அரசு!
கேரள அரசு தனது மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவ தயாராகி வருகிறது. இது எந்த அளவிற்கு பயன் உள்ளதாக இருக்கும் என்பதையும், நம் தமிழ்நாட்டில் எப்போது இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
பொருளாதாரத்தில் சற்று பின்தங்கி இருந்தாலும், கல்வியில் முன்னிலையில் இருப்பதாலோ என்னவோ மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக கேரள அரசு சமீப காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க கேரளா மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
அதுதான் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் ஆகும். நம் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதுமே எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் இயங்க உள்ளன என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் உள்ள முக்கிய பிரச்சனை என்னவென்றால், போதிய சார்ஜிங் நிலையங்கள் இல்லாதது ஆகும். எலக்ட்ரிக் காரை உருவாக்கும் நிறுவனம் வீட்டில் சார்ஜ் செய்வதற்கு வசதியாக சார்ஜரை வழங்கினாலும், அதில் சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரமாகிறது.
சரி… வெளியில் எங்கேனும் விரைவாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம் என பார்த்தால், நம் நாட்டில் இன்னும் அத்தகைய வசதிகள் பரவலாக இல்லை. டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே எலக்ட்ரிக் கார்களுக்கான ஃபாஸ்ட் நிலையங்கள் உள்ளன. இதனால், தொலைத்தூர பயணங்களுக்கு எலக்ட்ரிக் காரை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனை உணர்ந்த கேரள மாநில அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கேரள மாநில அமைச்சர் கே.கிருஷ்ணன் குட்டி சட்ட பேரவையில், மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 25 கிமீ தொலைவு இடைவெளியில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கினால் ரூ.10 லட்சம் வரையில் மானியம் வழங்கப்படும் எனவும் கேரள அமைச்சர் அறிவித்துள்ளார்.
மாநிலத்தின் சார்ஜிங் சிஸ்டத்தை விரிவுப்படுத்த கடந்த காலங்களிலும் கேரள மாநில அரசு பணியாற்றி உள்ளது. இதன்படி, 1140 மின் கம்பங்களில் சார்ஜிங் சிஸ்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், இவை எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் கிடையாது. ஆனால், மின் கம்பங்களில் சார்ஜிங் நிலையங்களை கொண்டுவருவது சரியான முயற்சியாகவே இருக்கும். எல்லா மின் கம்பங்களிலும் கொண்டுவர முடியாது என்றாலும், முக்கியமான சில மின் கம்பங்களில் இவி சார்ஜிங் வசதியை கொண்டுவரலாம்.
சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை அதிகமாகினால், எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் தைரியமாக வாங்குவர். இவ்வாறான நடவடிக்கைகளை நம் தமிழ்நாட்டில் இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், நம் மாநிலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவு. இந்த எண்ணிக்கை அதிகரித்தால் தான் சார்ஜிங் நிலையங்களை கொண்டுவருவதை பற்றி தமிழ்நாடு அரசு யோசிக்கும்.