ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு..!

சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு.,

நாட்டிலேயே முதன்முறையாக ஊரகப் பகுதிகளில் ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் குடிசைகளுக்குப் பதிலாக நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடித் திட்டம் மறைந்த முதல்வர் கருணாநிதியால் 1975-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடும் வகையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் விடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக 2024-25-ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.3.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். அறிவியல்பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தேர்வு, முறை, தங்கள் கனவு இல்லங்களை பயனாளிகள் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு என குறிப்பிடத்தக்க அம்சங்களைத் தாங்கிய இப்புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில், 2000 கி.மீ சாலை மேம்பாட்டுப் பணிகள் 1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II இன் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் 2,482 கிராம ஊராட்சிகளில் 1,127 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். திராவிட மாடல் அரசு, கடந்த 3 ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு 46 லட்சம் குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளது. மேலும், ஊரகப் பகுதிகளில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குப் பதிலாக, 365 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இந்த ஆண்டு அமைக்கப்படும்.

மாநகராட்சிப் பகுதிகளை அடுத்துள்ள விரிவாக்கப் பகுதிகளில், வரும் ஆண்டில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் மக்கள் பங்களிப்போடு 5,000 நீர்நிலைகளைப் புனரமைக்கும் பெரும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நாட்டிலேயே மிகச் சிறப்பாக செயல்படுத்திடும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் 92 லட்சம் பயனாளிகளில், 26 லட்சம் பட்டியல், 1.6 லட்சம் பழங்குடியினர்களும் அடங்குவர். அதிலும் குறிப்பாக, 79 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவது குறிப்பிடத்தக்கது. 2024-25 ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்காக 3,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெகிழிக் கழிவுகள் உள்ளிட்ட மட்காத குப்பைகள், கிராமப்புறங்களின் சுற்றுச்சூழலை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடுவைத் தவிர்க்க, முறையான திடக்கழிவு மேலாண்மைக் கட்டமைப்புகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் உருவாக்கி, மட்காத குப்பைகளை முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்தல், தொழில் நிறுவனங்களின் எரிபொருள் பயன்பாட்டுக்கு வழங்குதல் போன்ற பணிகளைச் செயல்படுத்தி சுகாதாரமான தமிழகத்தை உருவாக்கிடும் நோக்கோடு ஒரு புதிய நிறுவனம் ஏற்படுத்தப்படும்.

மத்திய அரசின் நிதி ஆயோக் சமீபத்திய தனது அறிக்கையில், பன்முக வறுமைக் குறியீட்டின்படி, தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் சதவீதம் மிக குறைவாக 2.2 சதவீதம் மட்டுமே என அறிவித்துள்ளது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறியநிலையில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினரும் அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது. இந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *