நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பகிர்ந்திருந்தார்.

இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து பேஸ்புக்கில் பதிவிட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *