ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி ஓராண்டு நிறைவு: முன்பைவிட வலிமையான செயல்பாட்டைக் கொண்டுள்ளதாக அதானி கருத்து
புதுடெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி ஓராண்டு முடிந்த நிலையில், முன்பைவிட வலிமையான செயல்பாட்டைக் கொண்டுள்ளோம் என்று அதானி குழும தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த ஆண்டு பல சோதனைகள் மற்றும் இன்னல்களை அதானி குழுமம் சந்தித்தது. அதுதான், நமது குழுமத்தை மேலும் வலுவானதாக மாற்றியுள்ளது. அதானி குழுமத்தின் செயல்பாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது. சொத்துகள் மேம்பட்டுள்ளதுடன், தாராவி மறுமேம்பாடு உட்பட பல முக்கியத் திட்டங்களை குழுமம் முன்னெடுத்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு சமமாக ரூ.40,000 கோடியை குழுமம்திரட்டியுள்ளது. சில நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலமாக ரூ.17,500 கோடியை திருப்பிச் செலுத்தியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் கடன் சுமை குறைக்கப்பட்டது.
நமது செயல்பாடுகள் வலுவாகியுள்ளதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இதுவரை இல்லாத காலாண்டுலாபத்தை குழுமம் பதிவு செய்துள்ளது.
பல சவால்கள் எழுந்தபோதிலும் எங்களின் வளர்ச்சி வேகத்தை தக்கவைப்பதில் நாங்கள் உறுதியுடன் செயல்பட்டோம். குழுமத்தின் முதலீடுகளை தொடர்ச்சியாக அதிகரித்தோம். இதையடுத்து, எங்களின் சொத்துக்களின் ஆதார வளர்ச்சி ரூ.4.5 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் குஜராத்தில் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி தளமான கவ்டாவில், ஒரு புதிய தாமிர உருக்காலை, பசுமையான ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பு, தாராவியின் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மறுவளர்ச்சி திட்டம் உட்பட பல முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டன.
எனவே, பொதுவெளியில் இருக்கும் பொய்யான தகவல்களை தொகுத்து உள்நோக்கத்துடன் ஹிண்டன்பர்க் அறிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இது,முற்றிலும் தவறான குற்றச்சாட்டுஎன்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. இவ்வாறு அதானி தெரிவித்துள்ளார்.