தொடர் சரிவில் சின்ன வெங்காயம் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!
தமிழகத்தில் தென் மாவட்டங்களான திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை உள்ளிட்டவற்றில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
இருப்பினும் கடந்த ஜூன், ஜூலை உள்ளிட்ட மாதங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தபோது, அதனுடன் சேர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்தது.
ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டதால், பல விவசாயிகள் ஆர்வத்துடன் சின்ன வெங்காயம் பயிரிட்டனர். ஆனால் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. அதாவது, கடந்த 4 நாள்களுக்கு முன்பு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உள்நாட்டில் விலை உயா்வைத் தடுக்க மத்திய அரசு மார்ச் 2024 வரை வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இதுவே வெங்காய விலை சரிவுக்கு காரணமாகியுள்ளது. இந்த விலை சரிவால் இல்லத்தரசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.