AI தொழில்நுட்பத்துடன் ஒப்போ புது மொபைல்.. உங்கள் இனம் எது என்பதையே கண்டுபிடித்துவிடுமாம்
சென்னை: நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஓப்போ நிறுவனத்தின் Oppo F25 Pro போன் அதிநவீன செயற்கை நுண்ணறிவு வசதிகளை கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓப்போ நிறுவனத்தின் Oppo F25 Pro போன் தற்போது சந்தையில் இருக்கும் 5ஜி போன்களிலேயே மிக ஸ்லிம்மான போன் என கூறப்படுகிறது. இது வரும் பிப்ரவரி 29ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த போனின் விலை 25,000 ரூபாய்க்குள் இருக்கும் என சொல்லப்படுகிறது. போனின் சிறப்பம்சங்கள் குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர் தான் இப்போது பேசு பொருளாகியுள்ளது.
இந்த போன் 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. 64 எம்பி மெயின் கேமரா கொண்டுள்ள இந்த போன், ஏஐ ஸ்மார்ட் இமேஜ் என்ற அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு நீண்ட காலமாகிவிட்டது. அதில் மிகச்சிறந்த கேமிரா ஏஐ தொழில்நுட்பம் கொண்டது Oppo F25 Pro என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் உள்ள போட்டோகிராஃபி ஏஐ தொழில்நுட்பம், ஒரு நபரை படம் எடுத்தால் அவரின் வயது, பாலினம் மற்றும் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது உட்பட அனைத்தையும் கண்டறியும் திறன் கொண்டது என கூறியுள்ளது.
இதனை கொண்டு புகைப்படத்தை மெருகூட்டுவது, முகத்தில் உள்ள பருக்கள் உள்ளிட்டவற்றை நீக்குவது , அழகாக்குவது போன்றவற்றை தானாகவே செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தானாகவே ஃபிரைட்னஸை சரி செய்து, இயற்கை தன்மை மாறாமல் அழகான புகைப்படம் எடுக்கும் என கூறி விளம்பரம் செய்யப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்ற விவாதத்தை இது எழுப்புகிறது. அல்காரிதம் அடிப்படையில் பயிற்சி பெறும் ஏஐ-க்கள் ஒரு புகைப்படத்தை கொண்டே அனைத்தையும் கூறிவிடும் என்றால் இதில் நன்மையும் உள்ளது தீமையும் உள்ளது என்கின்றனர் மக்கள்.
அண்மை காலமாக ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டே புது தயாரிப்புகளை வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட் கேமரா என்பதிலேயே கவனம் செலுத்துகின்றன. மென்பொருள், பயனாளர் பாதுகாப்பு ஆகிய அம்சங்களுக்கான முக்கியத்துவம் ஏன் குறைந்துவிட்டது என்ற கேள்வி எழுகிறது.