புதிய தலைவருக்கு எதிர்ப்பு: மல்யுத்த வீரர்களை நேரில் சந்தித்த ராகுல்

பா.ஜ.க எம்.பி-யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, பிரிஜ் பூஷன் மீது புகார்கள் அளிக்கப்பட்டு, வழக்குகள் தொடரப்பட்டது.

இதற்கிடையில், பிரிஜ் பூஷன் சரண் பதவி விலகக் கோரி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து பிரிஜ் பூஷண் சரண் சிங் விலகினார்.

எதிர்ப்பு

இதனை தொடந்து நடைபெற்ற இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளரான சஞ்சய் சிங் வெற்றிபெற்று புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்.

இதேபோல், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், 2020 ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட நாட்டின் உயரிய விளையாட்டு விருதான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதையும், அர்ஜுனா விருதையும் திருப்பித் தருவதாக அறிவித்தார்.

இடைநீக்கம்

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், டிசம்பர் 24 அன்று, இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தல்கள் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, முடிவெடுக்கும் செயல்பாட்டில் மீறப்பட்டதாகக் கூறியும், பிரிஜ் பூஷன் இன்னும் கூட்டமைப்பைக் கட்டுப்படுத்துகிறார் எனக் குறிப்பிட்டும், சஞ்சய் குமார் சிங் தலைமையிலான புதிய இந்திய மல்யுத்த சங்கத்தை இடைநீக்கம் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும், இந்திய மல்யுத்த சங்கத்தின் நடவடிக்கைகளை நிர்வகிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் குழு அமைக்க உள்ளது.

ராகுல் சந்திப்பு

இந்நிலையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்தார். ஹரியானா மாநிலம் சகாரா கிராமத்திற்கு சென்ற ராகுல்காந்தி, மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, தீபக் பூனியா உள்ளிட்டோரை சந்தித்தார். சகாரா, பஜ்ரங் பூனியாவின் சொந்த கிராமமாகும். அதிகாலை அங்கு சென்ற ராகுல்காந்தி மல்யுத்த வீரர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மல்யுத்த வீரர்களுக்கு தனது ஆதரவை ராகுல்காந்தி தெரிவித்தார்.

ஏ.என்.ஐ (ANI) செய்தி நிறுவனத்திடம் பேசிய பஜ்ரங் பூனியா, “அவர் (ராகுல் காந்தி) எங்களது அன்றாட மல்யுத்த நடவடிக்கையை பார்க்க வந்தார். அவர் எங்களுடன் மல்யுத்தம் செய்தார். ஒரு மல்யுத்த வீரரின் அன்றாட நடவடிக்கைகளை பார்க்க வந்தார்” என்று கூறினார்.

முன்னதாக, பஜ்ரங் பூனியா தனது பத்மஸ்ரீயை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக போராடும் “சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு” நீதி கிடைக்கும் வரை அதை திரும்பப் பெறப் போவதில்லை என்றும் கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *