ஓபிஎஸ் – சசிகலா திடீர் சந்திப்பு.. ஆளுங்கட்சியை கிழித்து தொங்கவிட்ட சின்னம்மா..!
திமுக அரசாங்கம் விளம்பரத்தை நம்பியே ஆட்சி செய்து வருகிறது. தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை கற்று கொடுப்பார்கள் என சசிகலா கூறியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அண்ணா நினைவிடத்திற்கு வந்த சசிகலாவை ஓபிஎஸ் சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா: ஜனநாயகத்தில் யார் வேண்டும் என்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் கட்சி தொடங்கியதை வரவேற்கிறோம். ஜெயலலிதா குறித்து திமுகவினர் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. வரலாறு தெரியாமல் மத்திய அமைச்சராக ஆ.ராசா இருந்திருக்கிறார். ஆ.ராசாவின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். பொதுமக்கள் பிரச்சனைகளை ஊடகங்கள் பேச வேண்டும். நான் தான் பயப்படாமல் பொதுமக்கள் பிரச்சனையை துணிந்து பேசுகிறேன். மடியில் கனம் இல்லை என்பதால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. டிஎன்பிஎஸ்சி 50,000 இளநிலை உதவியாளர் பதவி காலயாக உள்ளது. அதில், 2,000 தான் நிரப்புகிறது திமுக அரசு. திமுக அரசால் இதையே முழுவதுமாக செய்ய முடியவில்லை. இவர்கள் தான் முதலீட்டை ஈர்க்கிறார்களா என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும்போது மூத்த அமைச்சர் இருவரிடம் காவல்துறையை ஒப்படைத்து சென்றிக்க வேண்டும். இதை கூட செய்யாமல் வெளிநாடு சென்றுவிட்டார் ஸ்டாலின். ஏதேனும் ஒரு பிரச்சனை வந்தால் என்ன செய்வது. அன்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தன்னுடைய துறையை ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்து கவனிக்கச் சொன்னார்.
எங்கள் கட்சிக்காரர் ஓபிஎஸ் வருகிற வழியில் பார்த்து பேசினேன். எங்கள் குடும்பத்தில் ஒருவர் அவர். மகளிர் உரிமை தொகை ரூ.1000 மக்களுக்கு முறையாக கிடைக்கவில்லை. திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதே ஜெயலலிதா ஆட்சியாக இருந்திருந்தால் அந்த எம்எல்ஏவின் பதவி பறிபோய் இருக்கும். கார் ரேஸ் நடத்த முடியாமல் பணம் வீணாகியுள்ளது. இந்த அரசாங்கம் விளம்பரத்தை நம்பியே ஆட்சி செய்து வருகிறது. வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை கற்று கொடுப்பார்கள் என சசிகலா கூறியுள்ளார்.