ஓபிஎஸ் ரகசிய பிளான்.. எடப்பாடி காதுகளை எட்டியதும் அதிரடி முடிவு.. அதிமுக பொதுக்குழுவில் இதான் டாப்!
லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் ஒரு பிளான் குறித்த தகவல், எடப்பாடி பழனிசாமியின் காதுகளை எட்டியதும், உடனடியாக அதற்கு எண்ட் கார்டு போட திட்டமிட்டுள்ளாராம் ஈபிஎஸ்.
கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதிமுகவில் இரட்டை தலைமைகளாக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடு பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டு, அதன் பிறகு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.
பல்வேறு சர்ச்சைகளுடன் நடைபெற்ற அந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. ஒவ்வொரு கட்டமாக வழக்குகள் நகர்ந்து உச்ச நீதிமன்றம் வரை சென்றும், ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான நிலை ஏற்படவில்லை. தற்போது எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை வானகரம் பகுதியில் இன்று காலை 10:35 மணிக்கு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடுகிறது.
அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடக்கும் இந்தப் பொதுக்குழுவில், அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ள நிலையில் அதிமுகவின் கூட்டணி கணக்குகள் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்தும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது.
மேலும், இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஏ ஃபார்ம், பி ஃபார்மில் கையெழுத்திடும் அதிகாரம் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கே உண்டு என்ற வகையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
முன்பு இரட்டைத் தலைமை இருந்தபோது, ஏ ஃபார்ம், பி ஃபார்மில் அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடியும் கையெழுத்து இடுவார்கள். கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஓபிஎஸ்- எடப்பாடி இடையே ஏற்பட்ட இந்தச் சிக்கல் காரணமாக அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியவில்லை. பின்னர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, அதில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.
ஆனால், அங்கே ஒரு முக்கியமான திருப்பம் நடந்தது. அப்போதைக்கு, அதிமுக சார்பில், ஏ படிவம், பி படிவத்தில் கையெழுத்து இடும் அதிகாரம் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் இருந்தது. அதோடு, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அளிக்கப்பட்ட அதிகாரம், இந்த இடைத்தேர்தலுக்கு மட்டுமே என்றும் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தான், லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுகவின் அடிப்படை விதிகளைச் சுட்டிக்காட்டி, மீண்டும் கோர்ட்டை நாட ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அண்மையில் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்துப் பேசப்பட்டதாக தெரிகிறது. இரட்டை இலை சின்னத்திற்கு கையெழுத்து போடும் அதிகாரம் எடப்பாடிக்கு இன்னும் வரவில்லை என்ற விஷயத்தை கையில் எடுக்க ஓபிஎஸ் தரப்பு முயற்சிகளைத் தொடங்கியுள்ளதாம். ஓபிஎஸ்ஸின் இந்த முயற்சிக்கு இந்த முறை பாஜக தலைமையும் உதவி புரியக்கூடும் என்ற தகவல் எடப்பாடி பழனிசாமி காதுகளை எட்டியுள்ளது.
இதையடுத்தே, சட்ட வல்லுநர்களை மீண்டும் கலந்து ஆலோசித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதன்படியே, இனி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கான அங்கீகாரம் தரும் அதிகாரம் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கே என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.