OPS vs EPS : அதிமுக பொதுக்குழு வழக்கு… மனுவை தள்ளுபடி செய்து ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்
அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பல பிளவுகளாக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்து அதிமுகவை வழிநடத்தினர். இந்த கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து ஒற்றை தலைமை முழக்கம் எழுந்தது. தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது.
இதன் காரணமாக நீதிமன்ற அனுமதி பெற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இரட்டை தலைமை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில்,
முடிவுக்கு வந்த இரட்டை தலைமை
இரண்டு நீதிபதி கொண்ட அமர்வில் மேல் முறையிடப்பட்டது. அப்போதும், இந்த மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்த சென்னை உயரநீதிமன்றம் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறி ஓ.பன்னீர் செல்வத்தின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 8 ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவு செய்துள்ளாத ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் வாதாடினார். பொதுக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியை வீட்டு நீக்கியதாக வாதிடப்பட்டது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தங்கள் தரப்பினரின் அரசியல் வாழ்க்கையின் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது. அநியாயமாக தங்கள் தரப்பினர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. எனவே பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்
அப்போது நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் எப்படி தலையிட முடியும் என கேள்வி எழுப்பினர். மேலும் ஓபிஎஸ் உள்ளிட்ட 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை நிறுத்தி வைப்பது பல்வேறு சிக்கல்களைத் தூண்டும். தற்போதைய சூழலில் இந்த வழக்கில் எங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். இதனைதொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மனுக்களை, ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.