ஒரு பிளேபாய் போல வாழ்ந்த ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசன்..!
ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் ஒரு டெக் தொழிலதிபர் மட்டும் அல்லாமல் அவர் பல தனித்திறமைகளைக் கொண்டவர். எளிமையான வாழ்க்கைப் பின்னணியைக் கொண்ட லாரி எலிசன் தனது உழைப்பால் பெரும் பில்லியனர் ஆனார்.
அமெரிக்காவில் உள்ள பிரான்க்ஸில் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று லாரென்ஸ் ஜோசப் எலிசன் பிறந்தார். அவரது தாயார் கணவரைப் பிரிந்தவர். எலிசனின் இளமைக்காலம் மிகவும் கடினமாக இருந்தது. 9 மாதக் குழந்தையாக இருந்தபோது அவரை வளர்க்க முடியாததால் சிகாகோவில் இருந்த அவரது அத்தையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவரது வளர்ப்புத் தந்தையான லூயிஸ் எலிசன் ஒரு ரஷ்ய நாட்டு குடியேறி. அமெரிக்காவுக்கு குடிவந்தபோது எலிஸ் தீவின் நினைவாக தனது பெயரை எலிசன் என மாற்றிக் கொண்டார். சிகாகோவின் தென்பகுதியில் வளர்ந்த எலிசன் அர்பானா-சாம்பெயினில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார்.
ஆனால் அவரது வளர்ப்புத் தாயின் மறைவு காரணமாக படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார். மீண்டும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தபோது ஒரேயொரு செமஸ்டருடன் படிப்பை நிறுத்த வேண்டியாகிவிட்டது. 1996 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் உள்ள பெர்க்கெலி நகருக்கு எலிசன் குடிபெயர்ந்தார். பெர்க்கெலி டெக்னாலஜி துறையின் மையப்பகுதியாக விளங்கியது.
அங்கு அவர் கம்ப்யூட்டர் மற்றும் புரோகிமிங்கைக் கற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் ஆம்பெக்ஸ் என்ற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆம்பெக்ஸ் ஒரு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், அதில் ஆரக்கிள் என்ற புராஜக்ட்டில் எலிசன் வேலை பார்த்தார்.
ஐபிஎம் கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட் எட்கர் எப் காட் எழுதிய கட்டுரைகளைப் படித்து ஆர்வமடைந்த எலிசன், பாப் மைனர், எட் ஓட்டிஸ் ஆகியோருடன் சேர்ந்து ஆரக்கிள் எனும் ஒரு சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனத்தை 1977 ஆம் ஆண்டில் தொடங்கினார்.
வெறும் 2000 டாலர்கள் முதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இதில் 1200 டாலர்கள் எலிசனின் பங்காகும். எலிசனும் அவரது பார்ட்னர்களும் சேர்ந்து டேட்டாபேஸ் துறையில் பெரிய புரட்சியைப் படைத்தனர். ஆரக்கிள் நிறுவனம் சீக்கிரமே அசுர வளர்ச்சியை அடைந்தது. 1986 ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு 55 மில்லியன் டாலர்கள் வருவாயைப் பெற்றது.
இருப்பினும், பணிநீக்கங்கள் மற்றும் இன்பார்மிக்ஸ் போன்ற போட்டி, வாடிக்கையாளர்களுடன் சண்டைகள் போன்ற பல பிரச்னைகள் பெரும் சவால்களைத் தந்தன. எலிசனின் விடாப்பிடியான போட்டித் தன்மையும், போட்டியாளர்களை எதிர்கொள்வதில் இருந்த திறனும் அவருக்குக் கைகொடுத்தன. 2004 ஆம் ஆண்டில், ஆரக்கிள் ஹெச்ஆர் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான PeopleSoft ஐ $10.3 பில்லியனுக்கு வாங்கியது.
எலிசன் நான்கு முறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்துள்ளார்.
அவரது அபரிமிதமான செல்வத்தால் எலிசன் ஒரு காஸ்மோபாலிட்டன் மற்றும் ஜெட்-செட்டிங் பிளேபாய் என சொகுசாக வாழ்ந்தார். இதனிடையே பிரபல மாடலும் நடிகையுமான நிகிதா கானுடன் அவருக்கு நெருக்கமான உறவு இருந்தது. இவற்றுக்கும் மேலாக எலிசனின் நிகர சொத்து மதிப்பு உயர்ந்தது. ஃபோர்ப்ஸின் கணிப்பின்படி, அவர் உலகின் ஐந்தாவது பணக்காரர் ஆவார்.