Oral health | பற்களை ஒழுங்காக பராமரிக்காவிட்டால் நோய் கிருமிகள் தாக்கலாம்.. உஷார்..!
நம்முடைய வயது ஏற ஏற, நம் பற்களும் ஈறுகளும் பலவித மாற்றங்களை சந்திக்கின்றன. உடற்பயிற்சி போல் நம்முடைய வாய்வழி சுகாதாரத்தை வாழ்நாள் முழுவதும் பேணுவதும் அவசியமாகும். குழந்தை பிறந்து பற்கள் முளைப்பது முதல் வயதாகி பற்கள் விழுவது வரை நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் வாய்வழி சுகாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
உங்களுடைய பற்கள் ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் இருக்க வேண்டுமா? இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
0-12 வயது வரை:
குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பித்ததும் அதை பராமரிக்க தொடங்கிவிட வேண்டும்.
பச்சிளம் குழந்தைகளுக்கான மென்மையான டூத்ப்ரஷ்கள் கடைகளில் தாராளமாக கிடைக்கின்றன. அதை வாங்கி பயன்படுத்துங்கள். குழந்தைகளால் தங்கள் பற்களை ஒழுங்காக துலக்க முடியாது. அதனால் பெற்றோர்கள் உதவி செய்வது நல்லது. 8 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் ஒழுங்காக பற்கள் விளக்குகிறார்களா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
பற்களில் உள்ள பிரச்சனைகளை ஆரம்பயத்திலேயே தீர்க்க அவ்வப்போது பல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் போன்ற உணவுகளை குழந்தைகளின் டயட்டில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். அதுபோல் பற்கள் சொத்தையாவதை தடுக்க சர்க்கரை பண்டங்களை அளவாக சாப்பிட அறிவுறுத்துங்கள்.
இள வயது பருவம் (13-19 வயது):
பல் சீரமைப்பு ஒழுங்காக இருக்க பல் மருத்துவர் கூறும் பரிந்துரைகளை பின்பற்றுங்கள்.
டூத்ப்ரஷ் கொண்டு பல் துலக்குவது மற்றும் பற்களுக்கு இடையில் உள்ள கசடுகளை சுத்தம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
இள வயதினர் தினமும் இரண்டு முறை ஃப்ளோரைடு உள்ள டூத்பேஸ்ட் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும்.
இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு பெற்றோர்களின் வற்புறுத்தல் இல்லாமல் தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆகையால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எது சரியான உணவு என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டிய தேவையுள்ளது. சர்கரை கலந்த பானங்களை அதிகம் குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பெரியவர்கள் (20-50 வயது):
அடிக்கடி பல் பரிசோதனை, பற்களை சுத்தம் செய்வது, சொத்தை மற்றும் உடைந்த பற்களை சரி செய்வது போன்றவற்றை இவர்கள் கடைபிடிக்க வேண்டும்.
அதிக மன அழுத்தம் இருந்தால் பற்களை இறுக்கமாக மூடிக் கொள்வோம் அல்லது நற நறவென்று கடிப்போம். அதுவும் இரவு தூங்கும் சமயத்தில் இது அதிகமாக இருக்கும். ஆகையால் இதற்கான பாதுகாப்பு கவசங்களை வாயில் பொறுத்திக் கொள்வது நல்லது.
அதிகப்படியான புகையிலை மற்றும் குடிப்பழக்கம் வாய்வழி சுகாதாரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் உடனடியாக இந்தப் பழக்கத்தை கைவிடுங்கள்.
மத்திம வயது (51-65 வயது) :
ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இந்த வயதில் ஈறு சம்மந்தமான நோய்கள் வரும் ஆபத்து அதிகமுள்ளது.
ப்ரஷ் செய்யும் போது மென்மையாக துலக்குங்கள்.
அடிக்கடி பற்களை பரிசோதனை செய்வதன் மூலம் வாய்ப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்ளலாம். சிகரட் பிடிப்பது மற்றும் புகையிலை மெல்வதாலும் வயது அதிகமாவதாலும் வாய் வழி புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமுள்ளது.
முதியோர்கள் (65 வயதிற்கு மேலுள்ளவர்கள்):
பற்கள் சுத்தம் செய்வதற்கும் பரிசோதனைக்கும் அடிக்கடி தொடர்ந்து பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை உடனடியாக சரி செய்யவும்.
செயற்கை பல் பொறுத்தியிருந்தால், அதை சுத்தம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் பல மருத்துவரை சந்தியுங்கள்.
முதியோர்களுக்கு அதிகம் வாய் வறண்டு போகக்கூடும். ஆகையால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க நன்றாக தண்ணீர் பருகுங்கள்.