ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு!
தமிழகத்தின் முதலமைச்சராக 1991 முதல் 1996 வரை இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் முன்னரே ஜெயலலிதா காலமாகி விட்டார்.
முன்னதாக, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, ஜெயலலிதாவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தது. விலை உயர்ந்த புடவைகள், சால்வைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள், வெள்ளிப் பொருட்கள், தங்க நகைகள், கற்கள் பதித்த நகைகள் உள்ளிட்ட கோடிகணக்கான மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்த பொருட்களை ஏலம் விடக் கோரி சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், கர்நாடக அரசு சார்பில் ஆஜராக கிரண் ஜவாலி என்ற அரசு வழக்கறிஞரை நீதிமன்றம் நியமித்தது. ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய சொத்துகளை மட்டுமே ஏலம்விட முடியும் என்றும், புடவைகள், செருப்புகள் உள்ளிட்ட 28 வகையான பொருள்களை ஏலம்விட முடியாது என்றும் நீதிபதி கூறினார். இந்த நிலையில், இந்த வழக்கானது சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகளை ஏலம் விடுவதற்கு பதில், அவற்றை தமிழக அரசிடம் ஒப்படைப்பது நல்லது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
நகைகளை ஏலம் விடுவதற்குப் பதிலாக, தமிழக அரசின் உள்துறை மூலமாக தமிழகத்துக்கு மாற்றுவது நல்லது என்று நான் கருதுகிறேன். ஆகவே, தமிழக அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து அவர் மூலமாக போலீஸாருடன் இணைந்து நகைகளை பெற்றுக்கொள்ள வருமாறு உத்தரவிடுகிறேன்.” என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை நடத்துவதற்கு கர்நாடக அரசு செய்த செலவினங்களுக்காக கர்நாடக அரசின் பெயரில் 5 கோடி ரூபாய்க்கான வரைவோலையை (டிடி) அனுப்புமாறும் ஸ்டேட் பேங்க் சென்னை கிளை தலைமை மேலாளருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சார்பில், ஜெயலலிதாவின் சொத்துக்கள், பொருட்களை அவரது வாரிசான தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.