ஓவர் அடம்: மே.வங்கம், பஞ்சாப்பை தொடர்ந்து காங்கிரஸுக்கு குட்பை சொல்லும் உ.பி. அகிலேஷின் சமாஜ்வாதி?
லக்னோ: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிகளைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்திலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் அடம் பிடிக்கும் காங்கிரஸ் கட்சியை அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கழற்றிவிடக் கூடிய சாத்தியங்களே அதிகம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் முதல்வர் மமதா பானர்ஜியின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் களத்திலேயே இல்லை என்பதுதான் யதார்த்தம்.
மே.வங்கம், பஞ்சாப்பில் காங். உறவு முறிவு: இதனால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 முதல் அதிகபட்சமாக 4 தொகுதிகளை ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் முன்வந்தது. இந்த 4 தொகுதிகளில் 1 அல்லது 2-ல் தான் காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இம்முடிவை மமதா பானர்ஜி எடுத்திருந்தார். ஆனால் நாங்க பெரிய கட்சி.. எங்களுக்கு 10 சீட் தர வேண்டும் முரண்டுபிடித்தது காங்கிரஸ். இதனால் காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக மமதா பானர்ஜி அறிவித்தார். இதேபோலாதான் பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மியிடம் அதீதமான தொகுதி பேரம் நடத்தியது காங்கிரஸ். மமதா பானர்ஜியின் அறிவிப்பை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸுடன் உறவை முறித்து கொள்வதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அதிரடியாக அறிவித்தார்.