Pa.Ranjith : அடேங்கப்பா.. என்னா ஆட்டம்.. மார்கழியில் மக்களிசையில் செம Vibe-ல் பா.ரஞ்சித்.. அசத்தல் நடனம்!

மார்கழியில் மக்களிசையில் இயக்குநர் பா.ரஞ்சித் நடனமாடி வைப் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் மூலம் ஆவணப்படங்களைத் தயாரித்தல், நாடகங்களை அரங்கேற்றுதல் என சினிமாவைத் தாண்டிய பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அந்த வகையில், ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழு இதுவரை இசையின் மூலமாகவும், பாடலின் மூலமாகவும், உள்நாட்டு அரசியல் பற்றிய பாடல்கள், சமூகப்பிரச்னை பற்றிய பாடல்களை அரங்கேற்றியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாகக் கொண்டாடும் விதமாக மறுக்கப்பட்ட கலைகளை, மேடை ஏற்றி கௌரவிக்கும் நிகழ்ச்சியாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘மார்கழியில் மக்களிசை ‘2020’ எனும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
அதன் நீட்சியாக தற்போது 2023ஆம் ஆண்டின் ‘மார்கழியில் மக்களிசை 2023’ நிகழ்ச்சி iகேஜிஎப், ஓசூர், சென்னை என்று மூன்று இடங்களில் நடைபெற்றது. அதில் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் சென்னை, மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பள்ளியில் 3 இந்நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி நடிகர் விஜயகாந்த்தின் மறைவையொட்டி அன்று நடக்கவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி விஜயகாந்த்தின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, ‘மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
டிச.30 விழுப்புரம் பேண்ட் செட்டின் அரங்கம் அதிரும் இசையோடு ஆரம்பித்த நிகழ்ச்சி கானா, தம்மா தி பேண்ட், கரிந்தலக்கூட்டம், அறிவு அண்ட் தி அம்பசா குழு கலைஞர்களோடு கோலாகலமாக நடந்தது.
இதற்கிடையில், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த கலைஞர்களான சிந்தை ரேவ் ரவி, காரியப்பட்டி ராஜசேகர், ஆசானூர் சவரிமுத்து, ராஜபார்ட் மேக்கியார்பட்டி மகாராஜா ஆகியோருக்கு ‘மக்களிசை மாமணி 2023’ விருதும், 50 ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை எழுத்தாளர் தமிழ்பிரபா தொகுத்து வழங்கினார். இயக்குநர் பார்த்திபன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகர்கள் குரு சோமசுந்தரம், தினேஷ், மைம்கோபி, ஜான்விஜய், அசோக் 3 செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், சஞ்சனா என பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி ஒரு பண்பாட்டு மீட்சி, நான்கு ஆண்டுகளாக நீங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. மனிதமாண்பை மீட்டெடுக்கும் பண்பாட்டுப் புரட்சிதான் இது தொடர்ந்து அம்பேத்கரின் பாதையில் பயணிப்போம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் நடனமாடி வைப் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இசை ஒலிக்க ரஞ்சித் உற்சகமாக நடனமாட அவர் உடன் அசோக் செல்வன், அறிவு,சாந்தனு என அனைவரும் ஆட்டம் போடுகின்றனர். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பலரும் லவ் யூ ரஞ்சித் அண்ணா என கமெண்ட் செய்து வருகின்றனர்.