விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது… பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக?
கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, தேமுதிக நிறுவனத் தலைவரான மறைந்த விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்துள்ளது மத்திய அரசு. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மத்திய பாஜக அரசின் இந்த அறிவிப்பு, தேமுதிக உடனான தேர்தல் கூட்டணி கணக்கா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் 150க்கும் அதிகமான படங்களில் நடித்து, தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். ரஜினி, கமல்ஹாசன் பீக்கில் இருந்த காலக்கட்டத்திலேயே சினிமாவில் கோலோச்சிய அவர் , 2005ஆம் ஆண்டு தேமுதிக என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். கட்சி தொடங்கிய ஆறே ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை எட்டினார் விஜயகாந்த். அதன் பிறகு என்னவோ, அரசியல் களம் தேமுதிகவுக்கு தேய்முகமாகவே இருந்தது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானது அக்கட்சியினரிடையே மீளா துயரத்தை ஏற்படுத்தியது.
கட்சிப்பாகுபாடுகளை மறந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். மத்திய அரசின் சார்பில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். இதுமட்டுன்றி ஜனவரி 2ஆம் தேதி திருச்சி வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, அரசு விழாவில் விஜயகாந்தை புகழ்ந்து பேசினார். சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்தான் என்று புகழாரம் சூட்டினார்.
பிரதமர் பாராட்டியிருந்த நிலையில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருதினை அறிவித்துள்ளது மத்திய அரசு. விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜக தேசிய மகளிரணி தலைவரான வானதி சீனிவாசன், தேமுதிக அலுவலகத்திற்குச் சென்று பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துக் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், பொருத்தமான நேரத்தில், பொருத்தமான தலைவருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கேப்டன் விஜயகாந்திற்கான விருது அறிவிப்பை முழு மனதுடன் பிரேமலதா வரவேற்பார் என பலரும் எண்ணிய நேரத்தில், காலம் தாழ்ந்த முடிவு என பலிச்சென்று பதில் அளித்தார்.
பத்ம விருதுக்கு கேப்டன் விஜயகாந்த் பொருத்தமானவர் என்றாலும், விருது அறிவிக்கப்பட்ட காலம் தான் கேள்வியை எழுப்புகிறது. மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் எந்த பெரிய கட்சியும் தங்கள் கூட்டணியில் இல்லாத நிலையில், தேமுதிகவை மீண்டும் சேர்க்க பாஜக முயற்சி செய்கிறதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. எது எப்படியோ கூட்டணி விவகாரத்தில் பிரேமலதாவின் முடிவு என்ன?, பாஜகவின் அரசியல் கணக்கு பலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…