பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்..!
பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் தெய்வானை அம்மனை முருகப்பெருமான் திருமணம் செய்தார் என்பது புராண வரலாறு. இந்த நாள் பங்குனி உத்திர திருவிழாவாக, அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கோவிலிலும் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். எனவே நவபாஷாணத்தால் ஆன பழனி முருகப்பெருமான் சிலையை குளிர்விக்கும் பொருட்டு பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக்காவடி எடுத்து அபிஷேகம் செய்து வழிபடுவது பங்குனி உத்திர விழாவின் சிறப்பு அம்சம் ஆகும்.
இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை தந்தப்பல்லக்கில், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருவுலா நடக்கிறது. இதே போல் இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
விழாவின் 6-நாளான 23-ம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திரம் அன்று தேரோட்டமும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.