கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்
பாகிஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில் இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார். எதிர்க்கட்சிகளின் சார்பில் ஷெபாஷ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார். அவரது ஆட்சிக்காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இந்த நிலையில் பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இம்ரான் கான் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கட்சியினர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும் நிலையில், சுமார் 12 கோடி பேர் வாக்களிக்கின்றனர். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதற்காக இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பலுசிஸ்தான் மாகாணத்தில் தேர்தல் அலுவலகங்களில் நேற்று நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் வன்முறைகளை தடுக்க நாடு முழுவதும் காவல் துறையினர், ராணுவ வீரர்கள், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள் என சுமார் 6.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சி ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.